Friday, November 5, 2010

8 புதிய பண்ணைகளும் புதிய போராளிகளும்

      இலங்கை அரசின் இன ஒடுக்குமுறையும் ஜே.ஆர் ஜயவர்த்தன அரசின் சர்வாதிகாரமும்,
      பாசிசமும் ஒழுங்கமைக்கப்பட்ட பேரினவாதமாக விரிவடைகின்றது. புலிகளின்
      இருப்பைச் சுட்டிக்காட்டியே பேரினவாதம் சிங்களப்பகுதியில் தன்னை மேலும்மேலும்
      நிறுவிக்கொள்கிறது. தமிழ்ப் பேசும் சிறுபான்மையினர் மீதான, மொழி, கலாச்சார,
      பண்பாட்டு அடக்கு முறைகள் அதன் எல்லைகளைத் தாண்டி இராணுவ அடக்குமுறையாக
      விரிவடைகிறது. மறுபுறத்தில் அரச ஆதரவு தமிழ் அரசியல் வாதிகள் அரசாங்கத்துடன்
      இணைந்து தமிழ்ப் பேசும் மக்களின் பிரச்சனைக்குத் தீர்வு முன்வைக்கப்படும்
      என்கின்றனர்.
      நீதி அமைச்சராகப் பதவிவகித்த கே.டபுள்யூ.கே.தேவநாயகம் தமிழ்ப் பிரதேசங்களின்
      அபிவிருத்தியையே தமிழர்கள் எதிர்பார்க்கின்றனர், வன்முறையை அல்ல என
      பத்திரிகையாளர் மாநாட்டில் கூறுகிறார்.  அரசியல் அமைப்பை மாற்றியமைத்து
      தமிழர் பிரச்ச்னைகளுக்குத் தீர்வு காணப்படும் என்று மேலும் அவர் கூறிய அதே
      வேளை அம்பாறை, திருகோணமலை போன்ற பிரதேசங்களில் சிங்களக் குடியேற்றங்கள்
      தீவிரமடைகின்றன.
      பஸ்தியாம்பிள்ளை உட்பட்ட இரகசியப் பொலீசாரின் கொலை ஏற்படுத்திய அதிர்வலைகள்,
      புலிகளின் பலம் குறித்த வாதங்களைப் பரவலாகத் தோற்றுவித்திருந்தது. இப்
      படுகொலை நிகழ்ந்து சரியாக ஒருமாதமும் பத்து நாட்களும் ஆன நிலையில் புலிகள்
      தடைச் சட்டத்தை ஜெயவர்தன அரசாங்கம் நிறைவேற்றுகிறது. 19.05.1978 அன்று
      இலங்கைப் பாராளுமன்றம் புலிகளும் அதை ஒத்த அமைப்புக்களையும் தடைசெய்வதாகச்
      சட்டமூலம் ஒன்றை நிறைவேற்றுகின்றது. பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இந்தச்
      சட்டத்திற்கு எதிராக இலங்கை தொழிலாளர் காங்கிரசைச் சேர்ந்த தொண்டைமான்,
      தமிழர் விடுதலைக் கூட்டணி, சிறீலங்கா சுதந்திரக் கட்சி ஆகியன வாக்களிக்க, 131
      ஆதரவான வாக்குகளுடனும் 25 எதிரான வாக்குகளுடனும் சட்டமூலம் நிறைவேறுகிறது.
      இச்சட்டமூலம் இலங்கைப் பாதுகாப்புப் படைகளுக்கு முதல் தடைவையாக எல்லை மீறிய
      அதிகாரத்தை வழங்கியது.
      சட்டமூலம் குழு நிலையில் விவாதத்திற்கு உட்படுத்தப்பட்ட போது தமிழ் அமைச்சரான
      தேவநாயகம் அதனை ஒரு வருடத்திற்கு மட்டுமே அமுல்படுத்த வழிகோலும் சட்டமூலம்
      ஒன்றைப் பிரேரித்தார். அதுவும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அவ்வேளையில்
      எதிர்க்கட்சித் தலைவராக திரு.அமிர்தலிங்கம் இருந்தார். தடைச் சட்டத்தின் கீழ்
      நியமிக்கப்படும் ஆலோசனைக் குழுவில் எதிர்க்கட்சித் தலைவரால் முன்மொழியப்படும்
      ஒருவரும் ஏற்றுக்கொள்ளப்படுவார் என பிரதமமந்திரி ஆர்.பிரேமதாச தெரிவித்தார்.
      அந்த ஆலோசனைக் குழு மூன்று உறுப்பினர்களை மட்டுமே கொண்டதாகும் என அவர் மேலும்
      தெரிவித்தார். சபையில் விவாதத்தின் போது கருத்துத் தெரிவித்த அமிர்தலிங்கம்,
      வீரகேசரிப் பத்திரிகையில் வெளியான புலிகளின் கடிதம் உண்மைக்குப் புறம்பானது.
      அதில் குறிப்பிடப்படுள்ளது போல கனகரத்தினம் கொலைசெய்யப்படவில்லை.
      இது உண்மையானதல்ல சிருஷ்டிக்கப்பட்ட கடிதம் எனக் குறிப்பிட்ட அவர், ஒரு சில
      புலிகளைக் கைது செய்வதன் மூலம் இனப்பிரச்சனையைத் தீர்த்துவிட முடியாது
      என்றார். இச்சட்டம் நிறைவேற்றப்பட்டதும் அரசபடைகளின் அதிகாரம் வெளிப்படையாகவே
      தெரிய ஆரம்பித்தது. தமிழ் இளைஞர்களின் கைதுகளும் தாக்குதல்களும் அதிகரித்தன.
      எமது இயக்கத்திற்கான ஆதரவும் திடீரென ஒரு பாய்ச்சல் போல அதிகரித்ததை உணரக்
      கூடியதாக இருந்தது. இவ்வேளைகளில் மத்திய குழுவை அடிக்கடி கூட்டிக்கொள்வோம்.
      தேடப்படுவோரின் படங்கள் அடங்கிய சுவரொட்டி தமிழ்ப் பேசும் மக்கள் நடமாடும்
      பகுதிகளில் பரவலாக ஒட்டப்பட்டிருந்தது. நாகராஜா, உமாமகேஸ்வரன், கண்ணாடி
      பத்மனாதன், வாமதேவன் ஆகியோரின் படங்கள் முன்னணியில் பதிவு
      செய்யப்பட்டிருந்தன. இவர்களைக் காட்டிக்கொடுப்போருக்கு ஒருலட்சம் ரூபா
      சன்மானம் அறிவிக்கப்பட்டிருந்தது, இவர்களைத் தொடர்ந்து பிரபாகரன், ரவி
      போன்றோரின் படங்கள் பிரசுரிக்கப்பட்டு இருபத்து ஐயாயிரம் ரூபா சன்மானம்
      அறிவிக்கப்பட்டிருந்தது. தமிழ்ப் பேசும் மக்களைப் பொறுதத் வரையில் இவர்கள்
      எல்லாம் தம்மை விடுதலை செய்யவந்த கதாநாயகர்களாகவே நோக்கப்பட்டனர். இலங்கை
      முழுவதும் ஒரு புதிய அரசியல் சூழலுக்குள் இழுத்துச் செல்லப்படுவாதான நிலை
      தென்பட்டது.
      வாமதேவன் என்பவர் எஸ்.ஜே.வி.செல்வநாயகத்தின் கார்ச் சாரதியாக வேலைபார்த்தவர்
      என்பதைத் தவிர போராட்ட நடவடிக்கைகளுடன் அவருக்கு எந்தத் தொடர்பும்
      இருந்ததில்லை. சில தனிப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்ட இவர் குற்றவியல்
      வழக்குகளிலும் பதிவாகியிருந்தார். கண்ணாடி பத்மநாதன் ஏற்கனவே 1973 ஆம் ஆண்டு
      செட்டியால் கொல்லப்பட்டிருந்தார். புலிகள் தடைச் சட்டம் நிறைவேற்ற சில
      நாட்களிலேயே புதிய சுவரோட்டி ஒன்று இரகசியப் பொலீசாரால் தயாரிக்கப்படுகிறது.
      அச் சுவரொட்டியில் காசியானந்தன், வண்ணையானந்தன், அமிர்தலிங்கத்தின் மகன்
      காண்டீபன் போன்ற வெளிப்படையான உறுப்பினர்கள் உள்ளிட்ட 38 தமிழ் இளைஞர்கள்
      தேடப்படுவோராக அறிவிக்கப்பட்டனர். வேலுப்பிள்ளை பிரபாகரன்(வல்வெட்டித்துறை)
      சபாரத்தினம் சபாலிங்கம் (யாழ்ப்பாணம்) ஆறுமுகம் விவேகானந்தன் (யாழ்ப்பாணம்)
      சபாரத்தினம் இரத்தினகுமார் ( யாழ்ப்பாணம்) துரையப்பா ராஜலிங்கம்
      (கொக்குவில்), செல்லையா சபாரத்தினம் (யாழ்ப்பாணம்), தம்பிப்பிள்ளை சந்ததியார்
      (சங்கானை), ஐயா துரைபாலரத்தினம் (அளவெட்டி), வேலாயுதபிள்ளை திசைவீரசிங்கம்
      (கொடிகாமம்), பொன்னுத்துரை சத்தியசீலன் (சுன்னாகம்), நவரத்தினம்
      நாராயணதாஸ்(யாழ்ப்பாணம்), வைரமுத்து நீர்த்தகுமார் ( மானிப்பாய்),
      கனகசபைமுதலி சிவராஜா(நல்லூர்), மாவை சேனாதிராஜா(தெல்லிப்பளை), ஆறுமுகம்
      கிருபாகரன் (அரியாலை), அலோசியஸ் கனகசுந்தர் (வேம்படி), சுந்தரம்
      சபாரத்தினம்(திருநெல்வேலி), எஸ்.புஸ்பராஜா(மைலிட்டி), பூபாலரத்தினம்
      நடேசாந்தன் (மட்டக்களப்பு), தம்பித்துரை ஜீவராசா(சாவகச்சேரி), அமிர்தலிங்கம்
      காண்டீபன் (லண்டன் குவின்ஸ் ரோட்), காசியானந்தன் (அமிர்தகளி),
      ஞானம்(யாழ்ப்பாணம்), சுப்பிரமணியம் குருகுலசிங்கம் (திருநெல்வேலி), விஸ்வசோதி
      இரத்தினம் என்ற இன்பம்(நவாலி), கந்தசாமி சிறீஸ்கந்தராஜா(கரணவாய் தெற்கு),
      கே.எஸ்.ஆனந்தன் (சுன்னாகம்),செல்லையா பாலசிங்க(கல்வியங்காடு), அமரசிங்கம்
      நாகராஜா(நீராவியடி), வேலுப்பிள்ளை சுப்பிரமணியம்(யாழ்ப்பாணம்),
      நடேசப்பெருமாள் கனகரத்தினம்(பரந்தன்), செல்வராசா யோகச்சந்திரன்
      (வல்வெட்டித்துறை), சிவராமலிங்கம் சந்திரகுமார்(திருநெல்வேலி), வண்ணையானந்தன்
      (யாழ்ப்பாணம்), உமாமகேஸ்வரன் (தெல்லிப்பளை) போன்றோர் தேடப்பட்ட பட்டியலில்
      இடம்பெற்றனர்.
      இவர்களின் புகைப்படங்கள் அடங்கிய சுவரொட்டிகளை முன்னரைப் போலவே பொலீசார் பொது
      இடங்களில் ஒட்டியிருந்தனர். இதன் எதிரொலியாக சாவகச்சேரி எம்பி நவரத்தினம்,
      நல்லூர் எம்.பி சிவசிதம்பரம் ஆகியோர் கடுமையான ஆட்சேபனை தெரிவித்தனர்.
      ஏற்கனவே தேடப்பட்டு விடுவிக்கப்பட்டோரும், வெளிப்படையான அரசியல்
      நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்வர்களான, காசியானந்தன், வண்ணையானந்தன், மாவை
      சேனாதிராஜா ஆகியோரும் தேடப்படுபவர்களாக அறிவிக்கப்பட்டமை குறித்து ஆட்சேபம்
      தெரிவிக்க புதிய தேடப்படுவோரின் பட்டியல் ஒன்றைத் தயாரிக்கவிருப்பதாக பிரதமர்
      பிரேமதாச தெரிவிக்கிறார். இந்தச் சுவரொட்டியில் குறிப்பிடப்பட்டவர்களில்
      பிரபாகரனையும், கிருபாகரனையும், உமாமகேஸ்வரனையும்.நாகராஜாவையும்.ரவி யையும்
      தவிர மற்ற எவரும் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் உறுப்பினர்களாக இல்லை.
      இலங்கை அரச உளவுத்துறையின் பலவீனமும், தமிழ்ப் பேசும் மக்கள் மத்தியிலிருந்து
      தகவல் சேகரித்துக்கொள்வதற்கான வழிமுறைகள் இல்லாதிருந்த்மையையும் நாங்கள்
      கணித்துக்கொள்கிறோம். ஒரு வகையில் எமது நடவடிக்கைகளுக்குத் தமிழ் மக்களின்
      ஆதரவை இது வெளிப்படுத்துவதாகவும் அமைந்தது. தேடப்பட்டவர்களாக அறிவிக்கப்பட்ட
      பலர் தமிழரசுக் கட்சியைச் சார்ந்தவர்களாகவும், இளைஞர் பேரவையைச்
      சார்ந்தவர்களாகவும் இருந்தனர். புலிகள் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்பதாக
      தம்பித்துரை ஜீவராசாவும் தியாகராஜா எம்.பிஐக் கொலைசெய்வதற்கான நடவடிக்கையில்
      ஈடுபட்டு போலிசாரால் தேடப்படும்போது பிரபாகரனுக்கு முற்பட்ட பகுதிகளில்
      என்னைத் தொடர்புகொண்டவர். பெப்ரவரி ஆறாம் திகதி 1978 அன்று இலங்கை நிறைவேற்று
      அதிகாரமுடைய ஜனாதிபதியாகப் பிரகடனப்படுத்திக்கொண்ட ஜே.ஆர்.ஜெயவர்தன,
      யாப்பியல் சர்வாதிகாரத்தை நிலை நாட்டினார்.
      புலிகள் தடைச் சட்டம் நிறைவேற்றப்பட்ட நான்கு மாத இடைவெளியில் இலங்கையை
      ஜனநாயகச் சோசலிசக் குடியரசாக்கும் அரசியல் சட்டம் நிறைவேற்றப்பட்டது. அதற்கான
      அங்கீகாரம் 31ம் திகதி ஓகஸ்ட் மாதம் 1978 ஆம் ஆண்டு அமைச்சரவையால்
      வழங்கப்பட்டது. இதே நாளில் சுபவேளையில் இலங்கை நேரப்படி காலை 9:02 இற்கு
      இச்சட்டவரைவில் சபாநாயகர் கைச்சாத்திட்டார். அரசியல் அமைப்பில் அடிப்படை
      மாற்றங்களை ஏற்படுத்திய இச்சட்டமூலம் ஒரு புறத்தில் நிறைவேற்று அதிகாரமுடைய
      ஜனாதிபதியை மேலும் வலிமைபடைத்தவராக மாற்றியது, மறு புறத்த்தில் தமிழ் மொழியை
      இரண்டாவது மொழியாகச் சட்டரீதியாக மாற்றியமைத்தது. ஒரு நாட்டில் ஒரு குறித்த
      மக்கள் பிரிவினரால் பேசப்படுகின்ற மொழியை அந்த நாட்டு அரசே இரண்டாவது
      மொழியாகப் பிரகடனப்படுத்தி தேசிய இன அடக்குமுறையை சட்டமாக்கிய துயர நிகழ்வு
      இலங்கையில் நடந்தேறியது. இந்த அரசியல் அமைப்பிற்குரிய அங்குரார்பண வைபவம்
      07ம் திகதி செப்டெம்பர் மாதம் 1978 இல் நடைபெற்றது. இந்த வைபவம்
      நாடுமுழுவதும் அரசாங்கத்தினால் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.
      இலங்கையிலுள்ள ஆலயங்கள் எங்கிலும் 7 ஆம் திகதி வியாழக்கிழமை 7 மணிமுதல் 8
      மணிவரை கோவில் மணிகள் ஒலிக்க வேண்டும் என்றும் அதனைத் தொடர்ந்து பௌத்த
      ஆலயங்களிலும். கோவில்களிலும், பள்ளிவாசல்களிலும் பிரார்த்தனைகள் இடம்பெற
      வேண்டும் என ஜே.ஆர்.அரசு உத்தரவிட்டது. ஜே.ஆர்.ஜெயவர்தனவின் இனவாதத் தீயில்
      எரிந்து கொண்டிருந்த சிங்கள மக்களின் பௌத்த சிங்கள மேலாதிக்கவாத உணர்விற்கு
      இது எண்ணைவார்ப்பது போலிருந்தது. 7 ஆம் திகதி எதிர்பார்த்தபடி சிங்களப்
      பகுதிகள் முழுவதும் விழாக்கோலம் கொண்டிருந்தன. தெருக்களின் சிங்கள மக்கள்
      இலவச உணவு வழங்கி மகிழ்ந்தனர். இலங்கை சிங்கக் கொடியோடு அனைத்து வாகனங்களும்
      ஒலியெழுப்பி ஆர்ப்பரித்தன.
      வடகிழக்கு எங்கும் இனம்புரியாத சோகம் இழையோடியது. சொந்த தேசத்தில் இரண்டாம்தர
      குடிமகனாகிப்போன துயரம் ஒவ்வொரு தமிழ்ப் பேசும் இலங்கையனதும் முகத்தில்
      தெரிந்தது. மூன்றம் திகதி தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் அமிர்தலிங்கம்
      வெளிநாடு பயணமானார். எமது இனத்தின் விடுத்லைக்காக வெளிநாடுகளில் பிரச்சாரம்
      செய்யச் செல்வதாக உணர்ச்சிகரமாக விமானநிலையத்தில் பத்திரிகையாளர்களிடம்
      பேசினார். தமிழர்கள் கொதித்துப் போயிருந்தார்கள். வஞ்சம் தீர்க்கப்பட்டதான
      உணர்வு எல்லோர் மனதிலும் மேலோங்கியிருந்தது. இலங்கை முழுவதும் வன்முறைச்
      சம்பவங்கள் ஆங்காங்கே தலை காட்டி மறைகின்றன.
      இவ் வன்முறைகளின் உணர்வு ரீதியான பிரதிபலிப்பாக நாம் எதையாவது
      செய்தாகவேண்டும் என்பதில் முழு நேரத்தையும் தேசியப் போராட்டத்திற்காக
      அர்ப்பணித்த எமக்கு முழுமையான உடன்பாடிருந்தது. இந்த வேளையில், தமிழ்ப்
      பேசும் மக்களின் விடுதலைக்காக இராணுவத்தைக் கட்டியமைப்பதை நோக்கமாகக்
      கொண்டிருந்த தமிழீழ விடுதலைப் புலிகளாகிய நாம் இலங்கை அரசு திகைத்துப் போகும்
      வகையில் ஏதாவது செய்யவேண்டும் என்று எண்ணியிருந்தோம். அதற்கான தயாரிப்புகளை
      மேற்கொண்டிருந்தோம். அதுதான் பாகம் ஐந்தில் எனது பதிவில் குறிப்பிட்டிருந்த
      அவ்ரோ விமானக் குண்டுத் தாக்குதல். வழமை போல இதற்கான தயாரிப்பு வேலைகளில்
      உடனடியாகவே செயற்பட ஆரம்பித்துவிட்டோம்.
      இதற்கான முன் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக குலமும் பேபி சுப்ரமணியமும்
      பலாலியிலிருந்து கொழும்பு செல்லும் விமானத்தில் பயணம்செய்து நிலைமைகளை
      அவதானிப்பது எனத் தீர்மானிக்கப்படுகிறது. ஒத்திகை வேலைகளெல்லாம் முடிவடைந்து
      அவர்கள் இருவரும் கொழும்பிலிருந்து திரும்பிவந்து எம்மிடம் நிலைமைகளை
      விபரித்த பின்னர் குண்டுவெடிப்பிற்கான திட்டம் தீட்டப்படுகிறது. பேபி
      சுப்பிரமணியம் நேரக் குண்டைத் தயாரிக்கும் வேலைகளில் ஈடுபடுகிறார். அவருக்கு
      இக்குண்டுவெடிப்பை நிறைவேற்றும் முக்கிய பணி வழங்கப்படுகிறது. இதற்கான தொழில்
      நுட்ப வேலைகளிலும் குண்டைத் தயாரிப்பதிலும் உமாமகேஸ்வரனின் பங்கு
      குறிப்பிடத்தக்கது.
      பலஸ்தீனத்தில் பெற்றுக்கொண்ட இராணுவப் பயிற்சிகளின் போது நேரக்குண்டு
      தயாரிப்பதற்கான முழுமையான அறிவை அவர் பெற்றிருந்தார் இதே வேளை ராகவனும்
      எம்மோடிருந்தார்.  பேபி சுப்பிரமணியத்துடன் இணைத்து விமானத்தில் கொழும்ப்பு
      வரை ராகவனும் பயணம்செய்து விமானத்தில் குண்டுவைத்துவிட்டுத் திரும்புவதாக
      ஏற்பாடாகிறது. தகவல் சேகரிப்பு, பயணச் சீட்டு எல்லாம் தயாராகிவிட,
      திட்டமிட்டபடி அவர்கள் இருவரும் விமானத்தில் கொழும்பு நோக்கிப் பயணம்
      செய்கின்றனர். விமானநிலையத்தில் பயணிகள் அனைவரும் இறங்கிய பின்னர் குண்டு
      வெடிக்கும் நேரம் தகவைமைக்கப்படுகிறது. 7 ஆம் திகதி செப்டெம்பர் மாதம் இலங்கை
      ஜனநாயகச் சோசலிசக் குடியரசு அங்குரார்ப்பண வைபவம் கொழும்பு முழுவதும்
      கோலாகலமாகக் கொண்டாடப்படும் வேளையில் அவ்ரோ விமானம் தமிழீழ விடுதலைப்
      புலிகளால் குண்டுவைத்துத் தகர்க்கப்படுகிறது.
      இலங்கையின் தேசிய விமானச் சேவையை நடத்திக்கொண்டிருந்த ஒரே விமானமான அவ்ரோவைக்
      குண்டுவைத்துத் தகர்த்த நிகழ்வானது ஜே.ஆர்.அரசின் இதயத்தில் இரும்பால்
      அறைந்தது போலிருந்தது. மறு நாளே தேடுதல், கைது என்று கொழும்பு நகரமே
      யுத்தமுனை போலக் காட்சியளித்ததாக பத்திரிகைகள் செய்திவெளியிட்டன. தமிழ்
      மக்கள் ‘பொடியள்’ சாதித்துவிட்டதாக பெருமிதமடைந்தார்கள். எல்லாவற்றையும்
      ஓசைபடாமல் நிறைவேற்றிய வெற்றிக்களிப்புடன் ராகவனும் பேபி சுப்பிரமணியமும்
      பண்ணைக்குத் திரும்பிவிடுகிறார்கள். எமது தோள்களில் விடுதலையின் சுமையை உணர
      ஆரம்பிக்கிறோம்.
      புதியவர்களை இணைத்துக்கொள்ள வேண்டியதன் அவசியத்தையும், முறையான பயிற்சி
      வழங்கப்பட வேண்டியதன் தேவையையும் உணர்ந்து கொள்கிறோம். எம்மிடமிருந்த
      புத்தூர் வங்கிப்பணம் தனது இறுதியை நெருங்கும் தறுவாயிலிருந்தது. புதிய
      நடவடிக்கைகளுக்கான பணத்தைத் திரட்டிக்கொள்ள வேண்டியதன் அவசியத்தைப்
      புரிந்துகொள்கிறோம். அதற்கான சாத்தியமான அனைத்து வழிகளையும்
      விசாரணைசெய்கிறோம். இவ்வேளையில் திருநெல்வேலி அரச வங்கிக் கிளையிலிருந்து
      அங்கிருப்பவரூடாக ஊடாக சில தகவல்கள் எமக்குக் கிடைக்கின்றன.
      வெள்ளிக்கிழமை, 16 ஏப்ரல் 2010 21:15 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது

No comments:

Post a Comment