பதிவுகள் : ஐயர்
ஐயர் அவர்களின் வரலாறு ஈழப்போராட்டத்தின் வரலாற்றின் பிரதான பகுதி! ஈழப்
போராட்டத்தின் பரிணாமத்தை அவரின் சாட்சியிலிருந்தே புரிந்துகொள்ளலாம். சமூக
வரம்பையும், கொலைக் கரங்களையும் இன்னும் இன்னொரன்ன தடைகளையும் மீறி இறுதியில்
இடதுசாரியத்தோடு தன்னை இணைத்துக் கொண்டவர். பிரபாகரனோடு இணைந்து ஈழப்
போராட்டத்தை ஆரம்ப்பித்தவர். தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (PLOTE), தமிழீழ
தேசிய விடுதலை முன்னணி (NLFT), தீப்பொறி என்று தனது சரணடைவிற்கும்
விட்டுக்கொடுப்பிற்கும் அப்பாலான போராட்டத்தை இறுதிவரை நடத்தியவர். ஐயர்
கூறும் உண்மைகள் வெளிச்சத்தில் கடந்த காலத்தின் ஒரு பகுதி குறித்த புரிதலைப்
வந்தடையலாம் என நம்புவோம்.
நடந்தவை எல்லாமே ஒரு கனவு போல் இன்றும் மறுபடி மறுபடி எனது நினைவுகளை
ஆக்கிரமித்துக் கொள்கின்றன. வன்னி குறு நிலப்பரப்பில் ஆயரமாயிரமாய் மக்கள்
பலியெடுக்கப்பட்ட போதெல்லாம், செய்வதறியாது திகைத்துப் போனவர்களுள்,
உணர்வின்றி, உணவின்றி உறக்கம் தொலைத்து அதிர்ச்சியடைந்த ஆயியமாயிரம்
மனிதர்களுள் நானும் இன்னொருவன். தம்பி என்று அழைக்கப்பட்ட பிரபாகரனுடன் முதன்
முதலில் உருவாக்கிக் கொண்ட்ட அமைப்பின் மத்திய குழுவில் நானும் ஒருவன் என்ற
வகையில் இழப்புக்கள் எல்லாம் இன்னும் இறுக்கமாய் எனது இதயத்தை அறைந்தது. 1970
ஆம் ஆண்டு சிறீமாவோ பண்டாரநாயக்கவின் சுதந்திரக்கட்சியின் தலைமியிலான ஐக்கிய
முன்னணி அரசாங்கம் ஆட்சிக்கு வருகிறது. என்.எம்.பெரேரா என்ற ரொஸ்கிய வாத
இடதுசாரி நிதியமைச்சராக நியமிக்கப்படுகிறார்.
தமிழகத்திலிருந்து வருகின்ற பெரியாரின் எழுத்துக்களைப் படித்ததில் எனக்கு
நாத்திகவாததில் நாட்டம் ஏற்படுகிறது. பிராமணக் குடும்பத்தில் பிறந்த எனக்கு
எனது சுற்றத்திலிருந்து எதிர்ப்புக்கள் வருகின்றன.
எனது இருபதுகளில் ஏற்படுகின்ற இளைஞனுக்கே உரித்தான நாட்டங்களிலிருந்தெல்லாம்
விடுபட்டு புரட்சி போராட்டம் என்பன குறித்துச் சிந்திக்கிறோம். இடது சாரியம்
குறித்தும் மார்க்சியம் குறித்தும் அறிந்திராத நாம் தமிழ்ப் பேசும் மக்கள்
மீது சிங்களப் பேரினவாதம் கட்டவிழ்த்து விட்டிருந்த அடக்குமுறைகளை
எதிர்கொள்ளவேண்டும் என்ற எண்ணம் உருவாகிறது.
இந்த நிலையில் 1970 இல் இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சி, நவ சமசமாஜக் கட்சி, சிறீ
லன்கா சுதந்திரக் கட்சி ஆகின இணைந்து இலங்கையில் ஒர் அரசை அமைத்துக்
கொள்கின்றன. 1972 ஆம் ஆண்டு தமிழ் மாணவர்களின் பல்கலைக் கழக அனுமதியை
கட்டுப்படுத்தும் வகையில் இனவாரியான தரப்படுத்தல் சட்டமூலத்திற்கான மசோதா
பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டுகிறது. இது 1973 இல் அமுலுக்கு வருகிறது.
இதே வேளை 1971 இல் பௌத்த மதம் தேசிய மதமாகப் பிரகடனப் படுத்தப்படுகிறது. இதே
வேளை 1972 இல் இலங்கை குடியரசாகவும் பிரகடனப்படுத்தப் படுகிறது. இந்தக்
குடியரசில் தமிழ் பேசும் மக்களின் உரிமைக்களுக்கு எந்த உத்தரவாதமும்
வழங்கப்படவிலை என்பது தவிர இனவாரியான தரப்படுத்தல் என்பது திறமையுள்ள தமிழ்
மாணவர்கள் கூட ப்ல்கலைக் கழகக் கல்வியைப் பெற்றுக்கொள்ள முடியாத நிலையை
உருவாக்கின்றது. இதற்கு முன்னதாக 1958 இல் தமிழ் பேசும் சிறுபான்மையினர்
மீதான தாக்குதல்களின் வடு இன்னமும் ஆறியிருக்கவில்லை.
இதனால் விரக்தியுற்ற தமிழ் இளைஞர்கள் தமிழ் மாணர் பேரவை என்ற அமைப்பை
உருவாக்கின்றனர். சத்தியசீலன், சிவகுமாரன் போன்றோர் முன்னின்று உருவாக்கிய
இந்த அமைப்பில் நானும் எனது ஊரைச் சேர்ந்தவர்களும் பங்கெடுத்துக்கொள்கிறோம்.
பல ஆர்ப்பாட்டங்களிலும் போராட்டங்களிலும் ஈடுபடுகிறோம். இதே வேளை 1972 இல்
இலங்கை குடியரசு நாடாகிய போது நிகழ்ந்த எதிர்ப்புப் போராட்டங்களில் நானும்
குலம் என்ற எனது நண்படும் தீவிரமாகப் பங்கெடுக்கிறோம். பெரும்பாலான இந்த
எதிர்ப்புப் போராட்டங்கள் தமிழரசுக் கட்சியினால் ஒழுங்கு செய்யப்படுகின்றன.
சத்தியாக்கிரகப் போராட்டங்கள், ஊர்வலங்கள், கறுப்புக்கொடிப் போராட்டங்கள்
எனப் பல போராட்டங்களில் தீவிர பங்காற்றுகிறோம். இவ்வேளையில் தமிழரசுக்
கட்சிக்கும் மாணவர் பேரவைக்கும் அடிப்படையிலிருந்த முரண்பாடென்பது,
செயற்பாட்டுத்தளத்திலேயே அமைந்திருந்தது, மாணவர் பேரவை கூட்டணியின் செயற்பாடு
தீவிரமற்றதாக இருந்ததாகக் குற்றம் கூறினர்.
இந்த நேரத்தில் நாமெல்லாம் தூய தேசியவாத சிந்தனையுடனேயே செயற்பட
ஆரம்பித்தோம். எமக்குத் தெரிய சண்முகதாசனின் மாவோயிசக் கட்சி போன்றன தீவிர
இடதுசாரிக் கருத்துக்களுடன் வெளிவந்திருந்தாலும், தேசியப் பிரச்சனையில்
அவர்கள் அக்கறை கொண்டிருக்கவில்லை. தமிழ் பிரச்சனைகள் பற்றிப் பேசுவதெல்லாம்
அண்ணதுரை, கருணாநிதி, தமிழரசுக்கட்சி என்பன என்பதே எமக்குத் தெரிந்திருந்தவை.
குடியரசு தின எதிர்ப்புப் போராட்ட நிகழ்வுகளை ஒட்டி சுமார் 42 பேர்
சிறைப்படுத்தப்படுகின்றனர். சேனாதிராஜா, காசியானந்தன் வண்ணையானந்தன் உள்பட
பலர் இலங்கை அரசால் சிறைப் பிடிக்கப்படுகின்றனர். அத்ற்கு முன்னதாக அரச
சார்பானவர்களின் வீடுகள் முன்னால் குண்டெறிதல், பஸ் எரிப்பு, அரச வாகன
எரிப்பு போன்ற சிறிய வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்றன. இது தவிர குடியரசு
தினத்தன்று தொடர்ச்சியாக மக்கள் ஆதரவுடனான ஹர்த்தால் கடையடைப்பு என்பன
தொடர்ச்சியாக மூன்று நாட்கள் இடம்பெறுகின்றது.
இதே வேளை சிவகுமாரன் சோமவீர சந்திரசிறீ என்ற உதவிப் பொலிஸ் அத்தியட்சகரை
அவரின் தீவிர தமிழ் விரோத நடவடிக்கைகளுக்காக கொலை செய்வதற்கு பல தடவை
முயற்சிக்கிறார். தவிர யாழ்ப்பாண முதல்வராக இருந்த சிறீ லங்கா சுதந்திரக்
கட்சி முக்கியஸ்தரான துரையப்பாவைக் கொலைசெய்ய இரண்டு மூன்று தடைவைகள்
முயற்சிசெய்கிறார். இவையெல்லாம் தோல்வியிலேயே முடிவடைகின்றன.
இவேளையிலெல்லாம் நான் ஒரு ஆதரவாளர் மட்டத்திலான செயற்பாடுகளையே மேற்கொண்டேன்.
அதே வேளை வட்டுக்கோட்டை எம்.பீ ஆகவிருந்த அரச ஆதரவாளரான தியாகராஜா என்பவரைக்
கொலை செய்ய முயற்சித்த ஜீவராஜா என்பவர் தீவிரமாகத் தேடப்படுகிறார். அவர் எமது
ஊரான புன்னாலைக் கட்டுவனுக்குத் தலைமறைவாகும் நோக்கத்தோடு வருகிறார். அப்போது
நானும் குலம் என்பவரும் அவருக்கு பாதுகாப்பு ஏற்படுகளைச் மேற்கொண்டு
தலைமறைவாக வாழ்வதற்கு உதவிபுரிகின்றோம். கிராமத்திற்குக் கிராமம் பொலிசாரும்,
உளவாளிகளும் தமிழ் உணர்வாளர்களை வேட்டையாடித்திரிந்த அந்தக் காலகடம்
எதிர்ப்புணர்வும், வீரமும் நிறைந்த உற்சாகமான வாழ்க்கைப்பகுதி. அவரூடாக
பிரான்சிஸ் அல்லது கி.பி.அரவிந்தனும் எமக்கு அறிமுகமாகிறார். ஜீவராஜா,
பிரான்சிஸ், சிவகுமார், மகேந்திரன் ஆகியோர் எமது இடத்திலிருந்தே கோப்பாய்
வங்கிக் கொள்ளையை மேற்கொள்ளப் போகிறார்கள்.
இந்தக் கொள்ளையின் போது பொலீசாருடன் ஏற்பட்ட போராட்டத்தில் சிவகுமாரன் சயனைட்
வில்லைகளை அருந்தித் தற்கொலை செய்துகொள்கிறார். ஜீவராஜா கைது
செய்யப்படுகிறார். பிரான்சிஸ் தப்பிவந்து விடுகிறார்.
இதே வேளை செட்டி, பத்மநாதன், சிவராசா, ரத்னகுமார் ஆகிய நால்வரும் அனுராதபுரம்
சிறைச்சாலையிலிருந்து தப்பிவருகிறார்கள். அந்த நேரத்தில் இலங்கை அரச
அமைச்சர்களை வரவேற்று அழைத்து வந்த அருளம்பலம் என்பவரின் ஆதரவாளரான
குமாரகுலசிங்கம் என்பவரைக் கொலைசெய்ததன் அடிப்படையிலேயே செட்டி உட்பட்ட
இவர்கள் கைது செய்யப்பட்டனர். செட்டியை பொறுத்தவரை எதிர்ப்புப் போராட்ட,
வன்முறைப் போராட்ட உணர்வுகளுக்கு அப்பால் தனிப்பட்ட குற்றச் செயல்களில்
ஈடுபாடுள்ளவராகவே காணப்பட்டார். பல தனிப்பட்ட திருட்டுக் குற்றச்
செயல்களுக்காகத் தேடப்பட்டவர். அரசியலுக்கும் செட்டிக்கும் ஆழமான தொடர்புகள்
ஏதும் இருந்ததில்லை. அவர் சிறுவயதாக இருக்கும் போதே சிறுவர் சீர்திருத்தப்
பள்ளிக்கு அனுப்பப்பட்டவர். அரசிய தொடர்பு என்பது வெறும் தற்செயல் நிகழ்வே.
செட்டியைப் பற்றை எமக்கு அப்போது பெருதாகத் தெரிந்திருக்கவில்லை ஆனால் அவர்
எம்மைப் பற்றி அறிந்து கொண்டு எமது ஊருக்கு எம்மைத் தேடி வருகிறார். எமது
ஆதரவைக் கோருகிறார். அப்போது செட்டியும் ரத்னகுமாரும் அங்கு வருகின்றனர்.
அங்கு வந்தவர்கள் இலங்கை அரச படைகளுக்கு எதிராகப் போராடுவதற்குத் துப்பாக்கி
தேவை என்றும் அது சாத்தியமாவதற்கு ஆயுதங்கள் தேவை என்றும் கூறுகின்றனர்.
செட்டி அந்த நோக்கத்திற்காக தெல்லிப்பளை பலநோக்குக் கூட்டுறவுச்
சங்கத்திலிருந்து ஒரு லட்ச ரூபாய்களைக் கொள்ளையிடுகிறார். அந்தக் கொள்ளைப்
பணத்துடன் படகு மூலமாக அவர் இந்தியாவிற்குச் செல்கிறார்.
இதே வேளை பிரபாகரனின் சொந்த இடமான வல்வெட்டித்துறை இந்திய இலங்கைக்கு
இடையிலான கடத்தல் வியாபாரத்தின் பிரதான மையமாக இருந்தது. இதன் காரணமாகவும்
தமிழரசுக் கட்சி மற்றும் சுயாட்சிக் கழக நவரத்தினம் போன்றோரின் செல்வாக்குக்
காரணமாகவும் இயல்பாகவே இப்பிரதேசம் அரச எதிர்ப்புணர்வுடையதாக அமைந்திருந்தது.
இங்கு கடத்ததல் தொழிலில் முன்னணியிலிருந்த தங்கத்துரை, குட்டிமணி போன்றோர்
மாணவர் பேரவையின் ஆதரவாளர்களாகச் செயற்பட்டனர். இவர்கள் கடத்தலை முழு நேரத்
தொழிலாகக் கொண்டிருந்தாலும், அரசிற்கு எதிரான அரசியற் செயற்பாடுகளையும்
முன்னெடுத்து வந்தனர்.
சிறுவனாக இருந்த பிரபாகரன் குடியரசு தினத்தை ஒட்டி ஒரு அரச பேரூர்ந்து ஒன்றை
எரிப்பதற்கு முயற்சித்துத் தப்பித்ததால் அவரும் தேடப்படும் நிலைக்குத்
தள்ளப்படுகிறார். அப்போதெல்லாம் பிரபாகரனுக்கு பதினாறு அல்லது பதினேழு வயது
தான் நிரம்பியிருக்கும். பிரபாகரன் கடத்தல் தொழிலில் ஈடுபடவில்லையாயினும் அரச
எதிர்ப்பு விவகாரங்களில் குட்டிமணி, தங்கத்துரையுடன் தொடர்புகளைப்
பேணிக்கொள்கிறார்.
குறிப்பாக தமிழ் நாட்டிற்கான போக்குவரத்து வசதிகளுக்காக பிரபாகரன் மட்டுமல்ல
அனைத்து அரச எதிர்ப்பாளர்களும் குட்டிமணி, தங்கத்துரை போன்றோரைச்
சார்ந்திருக்கவேண்டிய நிலையே ஏற்பட்டது.
தேடப்படும் நிலையில் குட்டிமணியைச் சந்தித்து அவருடன் பிரபாகரன் தமிழ்
நாட்டிற்குத் தப்பிவருகிறார். இதேவேளை எம்முடன் தங்கியிருந்த செட்டியும்
இந்தியா செல்கிறார். அவ்வேளையில் செட்டி பிரபாகரனைச் சந்திக்கிறார்.
பிரபாகரனைப் பொறுத்தவரை முழுநேரமாக அரச எதிர்ப்பு வன்முறை அரசியலில் ஈடுபட
வேண்டும் என்ற கருத்தை குட்டிமணி, தங்கத்துரையிடம் முன்வைக்க அவர்கள் கடத்தல்
தொழிலைத் தொடர்ந்தவண்ணமிருந்தனர். இவ்வேளையில் செட்டியும் ஆயுதம் வாங்கி
இலங்கை அரசிற்கு எதிரான தாக்குதல்களில் ஈடுபட வேண்டும் என்ற கருத்தை
முன்வைக்கிறார். அவ்வேளையில் தான் பிரபாகரன் செட்டியுடன் இணைந்து செயற்படும்
முடிபிற்கு வருகிறார். சுமார் பதினெட்டுவயதாகும் போது தம்பி என்று
அழைக்கப்பட்ட பிரபாகரன் இம்முடிபை எடுக்கிறார்.
அவ்வேளையில் உலகத் தமிழர் பேரவையைச் சார்ந்த ஜனார்தனனின் தொடர்பு
பிரபாகரனிற்கு ஏற்படுகிறது. இதே வேளை தமிழ் நாட்டில் தங்கியிருந்த தமிழரசுக்
கட்சியைச் சார்ந்த ராஜரட்ணம் என்பவரின் தொடர்பு பிரபாகரனுக்கு ஏற்படுகிறது.
குடியரசு தின எதிர்ப்புப் போராட்டங்களின் போதான வன்முறை நிகழ்வுகளில்
தேடப்பட்டவர்களுள் ராஜரட்ணமும் ஒருவர். அவர்தான் பிரபாகரனுக்கு கரிகால்
சோழன், புலிக் கொடி போன்ற சரித்திர நிகழ்வுகளைப் போதிக்கிறார். அவர் தான்
இந்த அடிப்படைகளிலிருந்து தமிழ் புதிய புலிகள் என்ற பெயரை முன்வைத்து
அமைப்பொன்றை உருவாக்க வேண்டும் என்றும் ஆலோசனை வழங்குகிறார். பிரபாகரன் இந்த
ஆலோசனைகளால் ஆட்கொள்ளப்படுகிறார்.
இதன் பின்னர் பிரபாகரன் இலங்கைக்கு செட்டியுடன் திரும்பவந்து அரசியல்
நடவடிக்கைகளில் ஈடுபடத் தீர்மானிக்கிறார். இதனை தங்கத்துரை குட்டிமணியிடம்
கூறியபோது, அவர்கள் செட்டி கொள்ளைக்காரன், கிரிமினல் நடவடிக்கைகளில்
ஈடுபடுபவர் அவருடன் தொடர்புகளை வைத்திருக்க வேண்டாம் என அறிவுறுத்துகின்றனர்.
ஆனால், பிரபாகரனோ அவர்கள் தொடர்ந்து கடத்தல் தொழிலில் ஈடுபடுவதற்காகவே
இவ்வாறு நியாயப்படுத்துகின்றனர் என்று கூறி செட்டியுடன் நாடு திரும்புகிறார்.
இலங்கைக்கு வந்த பிரபாகரன் சிலரைச் சேர்த்துக்கொண்டு யாழ்ப்பாண மேயராகவிருந்த
துரையப்பாவைக் கொலைசெய்யவேண்டும் என்ற நோக்கத்தில் செயற்படுகிறார்.
அவ்வேளையில் தான் இன்பம், செல்வம் பொன்ற சில இளஞர்களைப் பிரபாகரன்
இணைத்துக்கொள்கிறார். இன்பம் செல்வம் இருவரும் பின்னர் இராணுவத்தினரால்
சுட்டுக் கொலைசெய்யப்பட்டார்கள்.
இவ்வாறு பிரபாகரன் துரையப்பாவை கொலைசெய்யும் முயற்சியில் ஈடுபட்டிருந்த போது,
செட்டி பொலீசாரால் கைது செய்யப்படுகிறார். அவர் வைத்திருந்த கொள்ளைப்
பணத்தில் கார் ஒன்றை வாங்கி தனது ஊரினுள்ளேயே உலாவித் திரிந்ததால் பொலீசாரின்
கண்ணுக்குள் அகப்பட்டு விடுகிறார், இதனாலேயே கைதும் செய்யப்படுகிறார்.
இதன் பின்னர் பிரபாகரன் தனக்குத் தெரிந்தவர்களைச் சேர்த்துக்கொண்டு
துரையப்பாவைக் கொலைசெய்யும் முயற்சியில் வெற்றி பெறுகிறார். இதில்
ஈடுபட்டவர்கள், பிரபாகரன், கிருபாகரன், கலாவதி, நற்குணராஜா என்ற நால்வருமே.
அவ்வேளையில் தமிழரசுக்கட்சியின் உணர்ச்சிகரப் பேச்சுகளால் உந்தப்பட்டுப் பல
இளைஞர்கள் துரையப்பாவைக் கொலைசெய்ய வேண்டும் என்ற முடிபிற்கு வந்திருந்தனர்.
துரையப்பாவைப் பொறுத்தவரை உரிமைகளை விட அபிவிருத்தியே முதன்மையானது என்ற
கருத்தைக் கொண்டிருந்தவர். இதனால் இலங்கை அரசின் அடக்குமுறைகளைக்
கண்டுகொண்டதில்லை. இன்றைய டக்ளஸ் தேவானந்தாவின் அதேவகையான நிலைப்பாட்டை அன்றே
கொண்டிருந்தவர். இந்த அடிப்படையில் பொலீசாரின் அடக்குமுறைகளுக்கும்
துணைபோனவர். பல்வேறுபட்ட இளைஞர்கள் இந்த முயற்சியில் தன்னிச்சையாக
ஈடுபடலாயினர். இப்போதெல்லாம் இக்கொலைகளை நாம் நியாயப் படுத்துவதென்பது ஆயுதக்
கலாச்சரத்தை அறிமுகப்படுத்துவதாகவே அமையும் ஆனால் அன்றோ நிலைமை மாறுபட்டதாக
இருந்தது. சிறீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சார்ந்த, மிகுந்த பாதுகாப்புடன்
வாழ்ந்த துரையப்பாவைக் கொலைசெய்தல் என்பது ஒரு சமூக அங்கீகாரமாகவே
கருதப்பட்டது.
பல இளைஞர்கள் இந்த முயற்சியில் குழுக்களாகவும் தனியாகவும் ஈடுபட்டிருந்த
போதும் கொலையை வெற்றிகரமாக நிறைவேற்றியவர் இவர்கள் நால்வரும் தான். இவர்கள்
நால்வருமே 20 இற்கு உட்பட்ட வயதுடையவர்களாகவே இருந்தனர்.
ஆனால் இக்கொலையை நிறைவேற்றியவர்கள் யார் என்பது வெளியுலகிற்கும்
பொலீசாருக்கும் தெரியாத இரகசியமாகவே இருந்தது. பின்னதாக கலாபதியையும்
கிருபாகரனையும் பொலீசார் கைதுசெய்துவிட்டனர். இவ்வேளையில் பிரபாகரன் தனது
வீட்டில் தங்கியிராததால் தப்பிக்கொண்டார் என்றே சொல்லவேண்டும். இவ்வேளையிலேயே
இதில் தொடர்பற்ற பலர் கைது செய்யப்படுகின்றனர், குறிப்பாக சந்ததியார் போன்ற
இளைஞர் பேரவை முக்கியஸ்தர்களும் கைதுசெய்யப்படுகின்றனர்.
இந்த வேளையில் பிரபாகரனுடன் சார்ந்த அனைவரும் கைதுசெய்யப்படுகின்றனர். பழைய
தொடர்புகள் அனைத்தையும் இழந்த தேடப்படும் நபராகவே காணப்படுகிறார்.
இவ்வேளையில் தான் எம்மைப்பற்றி அறிந்து கொண்ட பிரபாகரன் எம்மைத் தேடி எமது
ஊருக்கு வருகிறார். முதலில் எமது ஊரைச் சேர்ந்த ராகவனைச் சந்திக்கிறார்.
அவரின் ஊடாக என்னையும் குலம் என்பவரையும் தொடர்புகொள்ள முயற்சிக்கிறார்.
செட்டி தான் எமது தொடர்புகள் குறித்துத் தெரியப்படுத்தியதாகவும் கூறுகிறார்.
இவ்வேளையில் செட்டி தொடர்பாக நாம் முழுமையாக அறிந்திருந்தோம். இதனால்
செட்டியின் தொடர்பாளராகப் பிரபாகரன் அறிமுகமானதால் நாம் அவரைது தொடர்புகளை
நிராகரித்திருந்தோம்.
அந்த வேளையில் பிரபாகரனுக்கு உணவிற்கும் தங்குவதற்கும் எந்த வசதியுமற்ற
நிலையிலேயே காணப்பட்டார். சில நாட்களின் பின்னர் மறுபடி ராகவனுடன் வந்த
பிரபாகரன், எம்முடன் பேசவிரும்புவதாகத் தெரிவித்தார்.
அப்போது தான் முதன் முதலாகப் பிரபாகரனைச் சந்திக்கிறேன். இங்கிருந்துதான்
பிரபாகரனுடனான வரலாறு ஆரம்பமாகிறது.
பிரபாகரனைச் சந்தித்த போது, செட்டியிடம் சில பலவீனங்கள் இருந்தாலும் அவர்
துணிச்சல் மிக்கவரும், வீரமுள்ளவரும் என்பதால் அவருடன் இணைந்து
செயற்பட்டதாகக் கூறுகிறார். பலவீனங்களை நிவர்த்திசெய்துகொண்டால் செட்டியைத்
தான் தனது தலைவனாக ஏற்றுக்கொள்வதாகவும் அவர் கூறுகிறார். நாமும் அவருடன்
இணைந்து செயற்பட ஆரம்பிக்கிறோம். துரையப்பா கொலையில் தொடர்புடைய நால்வரில்
கலாவதியும் கிருபாகரனும் கைதுசெய்யப்பட பற்குணம் என்பவர் தமிழ் நாட்டிற்குத்
தப்பிச்சென்று விடுகிறார். பிரபாகரன் மட்டுமே இலங்கையில் இருக்கிறார்.
அவ்வேளையில் தான் தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவராக இருந்த
அமிர்தலிங்கத்தின் மகன் காண்டீபன் இந்தியாவிலிருந்து மயிலிட்டி என்ற
இடத்திற்கு வருகிறார். இவரும் தேடப்படுபவராக இருந்ததால் இந்தியாவில்
தலைமறைவாகியிருந்தார்.
அவ்வேளையில் இளைஞர் பேரவையில் ஆதரவளாரான தமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினர்
குமரகுரு என்பவர் பிரபாகரனை இந்தியாவிற்கு அனுப்புவதாக உறுதியளித்திருந்தார்.
ஆனால் காண்டீபன் இலங்கைக்கு வந்ததும், பிரபாகரனை இந்தியவிற்கு
அனுப்புவதற்குப் பதிலாக காண்டீபனை இந்தியாவிற்கு அனுப்பிவைக்கிறார். கொலையில்
நேரடியாக ஈடுபட்ட தன்னை அனுப்பாமல் காண்டீபனை அனுப்பிய இந்த நடவடிக்கை
காரணமாக பிரபாகரன் கூட்டணியினர் மீது வெறுப்படைந்து மறுபடி எம்மிடம்
வருகிறார். அதன் பின்னர் தான் இந்தியாவிற்கு இனித் தலைமறைவாகப் போவதில்லை என
முடிபிற்கு வந்து எம்முடன் இணைந்து அரசியல் வேலைகளில் ஈடுபடப்போவதாகக்
கூறுகிறார். பிரபாகரனுக்குத் தெரிந்தவர்கள் சிலர், நான், குலம், ராகவன்,
அனைவரும் இணைந்து சிலரது ஆதரவுடன் புத்தூர் வங்கிக் கொள்ளையில் ஈடுபடுகிறோம்.
பிரபாகரன், செட்டியின் உறவினரான செல்லக்கிளி, குமரச்செல்வம் ஆகியோர் நேரடியாக
வங்கிக்குள் சென்று கொள்ளையில் ஈடுபடுகின்றனர்.
அப்போது கிடைத்த பணம் எனது பொறுப்பிலேயே வைக்கப்பட்டிருந்தது. அதில் ஈடுபட்ட
இருவர் தமக்குக் குடும்பச் சுமை இருப்பதாகவும் தமக்கு பண உதவி செய்தாலே முழு
நேரமாக இயங்க முடியும் என்ற கோரிக்கையை முன்வைத்தனர். அவர்களுக்கும்
ஐந்தாயிரம் ரூபாய்கள் வழங்கப்பட்டன. அவ்வேளையில் நான், ராகவன் தவிர்ந்த
ஏனையோருக்கு கடவுள் பற்று இருந்தது. குறிப்பாகப் பிரபாகரன் மிகுந்த கடவுள்
பக்தி உடையவராகவும், சாஸ்திர சம்பிரதாயங்களில் நம்பிக்கை கொண்டவராகவும்
காணப்பட்டார். இதனால் பிரபாகரனின் முன்மொழிவின் பேரில் செல்லச் சன்னதி
கோவிலில், வங்கிக்கொள்ளைப் பணத்தில் ஒரு அன்னதானம் வழங்கப்பட்டது. என்
போன்றவர்களுக்கு மார்க்சிய தத்துவங்கள் குறித்துத் தெரிந்திராவிட்டாலும்,
கடவுள் மறுப்பு என்பது பெரியாரியக் கொள்கைகளூடான தாக்கத்தினால்
ஏற்பட்டிருந்தது. இதனால் இந்தச் செல்லச்சனதிக் கோவில் நிகழ்வை முற்றாக
மறுத்திருந்தேன். குலம், நான் , ராகவன் மூவரும் தான் இதை முழுமையாக
எதிர்த்தோம்.
வேடிக்கை என்னவென்றால் இவ்வேளையிலும் கூட நான் தொழில் ரீதியாக கோவிலில்
பிராமணராக இருந்தேன் என்பதுதான்.
எது எவ்வாறாயினும் பிரபாகரன் அப்போது எமக்கெல்லாம் ஒரு ஹீரோ போலத்தான்.
துரையப்பா கொலையை வெற்றிகரமாக முடித்தவர் என்பது தான் இதன் அடிப்படைக்
காரணம்.
ராகவன் புத்தூர் வங்கிக் கொள்ளையில் ஈடுபடவில்லை. இது கூட ஒரு கடவுள்
மறுப்பின் காரணமாகத் தான். வங்கிக் கொள்ளைக்குத் தேவையான துப்பாக்கி ரவைகளை
வாங்குவதற்காக பிரபாகரன் ராகவனை வேறொரு இடத்திற்கு அனுப்பிவைக்கிறார்.
அவ்வேளையில் அங்கு கோவில் திருவிழா நடை பெற்றுக்கொண்டிருந்தது. அப்போது
அங்கிருந்த ஒருவர் ராகவன் கடவுள் இல்லை என்று சொல்வதால் அவரைத்
தீக்குளித்துக் காட்டுமாறு கேட்டிருக்கிறார். அவ்வாறு நடந்த
வாக்குவாததிலெல்லாம் ஈடுபட்டதால் பிரபாகரன் ஆத்திரமடைந்திருக்கிறார். போன
வேலையில் ஈடுபடாமல் வேறு வாக்குவாதத்தில் ஈடுபட்டார் என்று ராகவனை சில காலம்
நீக்கி வைத்திருந்தார்.
இதனாலேதான் ராகவன் புத்தூர் வங்கிக் கொள்ளையில் கூடப் பங்குபற்றவில்லை. ஒரு
சில நாட்களுக்கே விலகியிருந்த ராகவன் மீண்டும் இணைந்து கொள்கிறார். இதன்
பின்னர் இராணுவப் பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்ற முடிபிற்கு வருகிறோம்.
புளியங்குளம் காட்டில் ஒரு இடத்தையும் தேர்ந்து கொள்கிறோம். அங்குதான் எமது
பயிற்சிகளை ஆரம்பிக்கிறோம். இந்த முகாமில் முழு நேரமாக பங்கெடுத்துக்
கொண்டவர்கள் நானும் பிரபாகரனும் மட்டும்தான். மற்றவர்கள் பகுதி நேரமாக அங்கு
பயிற்சிக்கு வந்து போவார்கள். அவ்வேளையில் எமது குழுவிற்கான மத்திய நிர்வகக்
குழு ஒன்றை அமைத்துக் கொள்கிறோம். அக்குழுவில் நான், பிரபாகரன்,
குமரச்செல்வம், பட்டண்ணா, சின்னராசு என்கிற உதய குமார் என்ற ஐந்து பேரும்
அங்கம் வகிக்கிறோம். அப்போது பருமட்டான திட்டம் ஒன்றினை முன்வைக்கிறோம்
1. இலங்கை அரசிற்கு எதிரான ஆயுதப் போராடம்.
2. தமிழீழம் கிடைத்த பின்னர் தான் இயக்கம் கலைக்கப்படும்.
3. இயக்கதில் இருப்பவர்கள் காதலிலோ பந்த பாசங்களிலோ ஈடுபடக்கூடாது.
4. இயகத்திலிருந்து விலகி வேறு அமைப்பில் இணைந்தாலோ, அல்லது வேறு
அமைப்புக்களை ஆரம்பித்தாலோ அவர்களுக்கு மரண தண்டனை வழங்கப்படும்.
இவையெல்லாம் அன்று எமக்கு நியாயமான சுலோகங்களாகத் தான் தெரிந்தன. இவற்றின்
அடிப்படைகளே இன்று ஆயிரமாயிரம் உட்கொலைகளை உருவாக்கி ஈழப்போராட்டத்தில்
இரத்தம் உறைந்த வரலாற்றை உருவாக்கும் என்று நாமெல்லாம்
எதிர்பார்த்திருக்கவில்லை.
ஈழப் போராட்ட வரலாறு குறித்து வேறுபட்ட காலகட்டங்களில் வேறுபட்ட பிரசுரங்கள்
வெளிவந்துள்ள போதிலும், அவை அனைத்தும் எதாவது ஒரு அரசியல் பின்புலத்தை
நியாயப்படுத்தும் நோக்கிலேயே வெளிவந்துள்ளன. நான் சொல்லப் போவதெல்லாம் ஈழப்
போராட்டத்தின் ஒரு பகுதி மட்டுமே. ஏனைய அமைப்புக்களும் போராட்டங்களும் கூட
இன்னொரு கோர வரலாற்ரைக் கொண்டிருப்பார்கள் என நம்புகிறேன். என்னைப்
பொறுத்தவரை நான் சாட்சியாக முன்மொழியத்தக்க அனைத்து அரசியல் நிகழ்வுகளையும்,
வரலாற்றையும் உண்மைச் சம்பங்களை முன்வைத்து எழுத்துருவாக்குவதை இன்றைய
கடமையாக எண்ணுகிறேன். என்னோடு பங்களித்த ராகவன், குலம், கிருபாகரன்,கலாபதி
உள்ளிட்ட அனைவரும் இது முழுமை பெறத் தமது பங்களிப்பை வழங்குவார்கள் என
எதிர்பார்க்கிறேன்.
ஞாயிற்றுக்கிழமை, 21 பெப்ரவரி 2010 00:05 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது
No comments:
Post a Comment