Friday, November 5, 2010

20- புதிய பாதையின் தோற்றம்

ஆயுதங்கள் உட்பட அனைத்தையும் பிரபாகரன் குழுவிடம் ஒப்படைத்துவிட்டு மக்களை
அணிதிரட்டும் வேலைகளில் நாங்கள் ஈடுபட வேண்டும் என்பதில் நாகராஜா, சாந்தன், குமணன்,
நந்தன் போன்றோர் மிகவும் உறுதியாகக் குரல் கொடுத்தனர். சுந்தரம், கண்ணன்
போன்றவர்கள் ஆயுதங்களை வைத்திருக்க வேண்டும் என்பதில் விட்டுக்கொடுப்பின்றிப்
போராடினார்கள். இவர்கள் இருவருமே பின்நாளில் புளொட் அமைப்பில் முக்கிய போராளிகளாகப்
பங்காறியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒருவாறாக ராகவனூடாக அனைத்து உடமைகளும் பிரபாகரன் குழுவினரிடம் ஒப்படைக்கப்படுகிறது.
ஆயுதங்கள் ஒப்படைக்கப்பட்ட பின்னர், பிரபாகரன் சாராத அனைவரும் குழுவாக இயங்குவதாகத்
தீர்மானிக்கிறோம். முன்னமே முன்வைத்த முன்மொழிவுகளின் அடிப்படையில் ஒரு குழுவை
உருவாக்கிக் கொள்கிறோம். மக்களை அணிதிரட்டும் வேலைகளை முன்னெடுப்பது என்பதை முதன்மை
நோக்கமாகக் கொண்டிருந்தோம். அதற்காக எம்மை முழுமையாக அர்ப்பணிப்பதாகத்
தீர்மானித்துக்கொண்டோம்.
எது எவ்வாறாயினும் சில குறிப்பனவர்களைத் தவிர அனைத்து உறுப்பினர்களிடமும் விரக்தி
மனப்பான்மை மேலோங்கியிருந்தது. யாரும் இவ்வாறான பிரிவை எதிர்பார்க்கவில்லை.
செயற்குழுவை அமைப்பதற்குப் பிரபாகரன் சம்மதம் தெரிவித்த போது அனைத்து இயக்கத்
தோழர்களும் அளவற்ற மகிழ்ச்சியடைந்திருந்தனர். செயற்குழு உருவாக்கப்பட்டு மக்கள்
வேலை என்ற அரசியலை முன்வைத்த வேளையில் எமக்கெல்லாம் விடுதலையே கிடைத்தது
போலிருந்தது.
மக்களைப் பொறுத்தவரை ஆயுதப் போராட்டம் குறித்தோ, பாராளுமன்ற அரசியலுக்கு அப்பாலான
அரசியல் குறித்தோ கிஞ்சித்தும் சிந்தித்திராத காலகட்டமது.
அரசுக்கு எதிரான எதிர்ப்புணர்வு மேலோங்கியிருந்தது. வடபகுதியை இராணுவ மயப்படுத்தும்
திட்டத்தை ஜெயவர்தன அரசு ஆரம்பித்திருந்தது. யாழ்ப்பாணத்தில் பிரிகேடியர் வீரதுங்க
என்ற இராணுவ அதிகாரியின் தலைமையில் மக்கள் மீதான அடக்குமுறை சிவில் நிர்வாக
வரைமுறைகளுக்கும் அப்பால் சென்று இராணுவ வழிமுறையாக மாற்றமடைய ஆரம்பித்திருந்தது.
வடக்கிலும் கிழக்கிலும் இளைஞர்கள் காரணமின்றிக் கைது செய்யப்பட்டனர்.
திருகோணமலையில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் சிறிது சிறிதாக
ஆரம்பிக்கப்பட்டிருந்தன. கிழக்கு மாகாணமெங்கும் இராணுவ பொலீஸ் கூட்டு நடவடிக்கைகள்
ஆரம்பித்திருந்தன.
தெற்கில் ஜயவர்தன அரசின் நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி ஆட்சிமுறை
எதிர்க்கட்சிகளை அடக்க ஆரம்பித்திருந்தது. பல தடவைகள் நாட்டின் ஒருமைப்பாட்டையும்,
புலிகளையும் காரணம் காட்டியே தென்னிலங்கையில் அரச பாசிசம் வளர்ச்சியடைய
ஆரம்பித்தது.
அரச சார்பு தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்களும் அரசியல் வாதிகளும் உரிமைப்
போராட்டத்திற்கு எதிராக அபிவிருத்தியை முன்வைத்தனர். வடக்கில் துரையப்பா முன்வைத்த
அபிவிருத்தித் திட்டங்கள் போலவே கிழக்கில் பேரினவாத அரசுடன் இணைந்திருந்த தேவநாயகம்
தனது திட்டங்களை முன்வைத்தார். இவரெல்லாம் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள்
தொடர்பாக மூச்சுக்கூட விட்டதில்லை. தமிழ் இளைஞர்கள் கைது செய்யப்பட்டால்
பயங்கரவாதம் ஒழிக்கப்படுகிறது என்றார்.
இவை அனைத்துக்கும் மத்தியில் எழுபதுகளின் ஆரம்பத்தில் ஏற்பட்ட கலாச்சார
மாற்றத்தினதும், புதிய மத்தியதர வர்க்கத்தினதும் எழுச்சி அதன் எச்ச சொச்சங்களைக்
கொண்டிருந்தது. உலகம் முழுவதும் ஏற்பட்டிருந்த தாராளவாத மாற்றங்களால்
பாதிக்கப்பட்டிருந்த தெற்காசிய நாடுகளில் இலங்கையும் பிரதானமானதாக அமைந்திருந்தது.
பொப்பிசையும், துள்ளிசையும், பெண்களின் மினி ஆடைகளும் தமிழ்ப் பழமைவாதக் கலாச்சார
வரம்புகளை உடைத்துப் பீறிட்டு எழுந்திருந்தது.
இளைஞர்களைப் பொறுத்தவரை அதன் தாக்கதிலிருந்து விடுவித்துக்கொண்டு போராட்டத்தைக்
குறித்துச் சிந்திப்பது என்பது மிகக் கடினமான ஒன்றாகவே அமைந்திருந்தது.
சுகபோகங்களை அனுபவிப்பதற்கோ அல்லது கல்வியை மூலதனமாக்கி அதற்காகத் தம்மைத்
தயார்படுத்திக் கொள்வதே பெரும்பாலானவர்களின் இறுதி நோக்கமாக இருந்தது.
உலகளாவியரீதியில் எழுபதுகளில் ஏற்பட்ட மாற்றங்கள் மனிதனைச் சுயநலம் மிக்க விலங்காக
மாற்றிக்கொண்டிருந்தது. ஒவ்வொரு உலக மாற்றத்தின் போதும் இவ்வாறுதான் மனிதர்கள்
மாற்றமடைவார்களோ மறுபடி நிகழும் இன்றைய மாற்றங்கள் சிந்திகத் தூண்டுகின்றன.
இவற்றின் தாக்கத்திற்கு அப்பால் முழு நேரமாகத் தான் சார்ந்த சமூகத்திற்காகப் போராட
முன்வந்த ஐம்பதிற்கும் மேற்பட்ட இளைஞர் குழாமைக் கொண்டிருந்த தமிழீழ விடுதலைப்
புலிகள் இரண்டாகப் பிளவுற்றமையை யாரும் எதிர்பார்த்திருக்கவில்லை.
அதுவும் பகை முரண்பாடாக மாற்றமடையுமோ என அச்சம் கொள்கின்ற அளவிற்கு இந்தப் பிரிவினை
உருவாகும் என செயற்குழு உருவாக வேண்டும் என்ற திட்டத்தை முன்வைத்த நான் உட்பட
எவருமே எதிர்பார்த்திருக்கவில்லை.
ஆயுதங்களை ராகவனிடம் ஒப்படைத்த போது அவரின் முகத்திலும் இனம்புரியாத சோகம்
இழையோடியிருந்ததைக் காணக்கூடியதாக இருந்தது.
இப்போது ஆயுதங்களோ பணமோ எதுவுமின்றிய வெறும் உணர்வுமிக்க சில முழு நேர
உறுப்பினர்களைக் கொண்ட குழுவாக நாம் எமது வேலைகளை ஆரம்பிக்கிறோம்.
அடுத்த வேளை உணவிற்கு என்ன செய்வது என்பது எமக்கு நாளாந்தப் பிரச்சனையாகியிருந்த
துயர் படிந்த காலகட்டமது. பல நாட்களை பங்கிட்டுக்கொள்ள உணவின்றி பசித்த வயிற்றோடு
நகர்த்தியிருக்கிறோம். அனைவரும் நாள் கூலிக்குச் வேலை செய்வோம். அமைப்பிற்கான
செலவு, உறுப்பினர்களின் உடை, உணவு, பிரயாணச் செலவு என்று எல்லாமே எமது நாள்
கூலியிலிருந்தே திரட்டிக்கொண்டோம். கொள்ளை முயற்சிகளில் ஈடுபடுவதில்லை என மிக
உறுதியாக இருந்தோம்.
நாகராஜா, குமணன், நிர்மலன், சாந்தன், சுந்தரம், மாதி, கண்ணன், நந்தன், சிவம் அழகன்,
நெபோலியன் போன்ற தோழர்கள் எம்மோடு இருந்தனர். அதேவேளை மறுபக்கத்தில் பிரபாகரன்,
ராகவன், பண்டிதர், மனோமாஸ்டர், மாத்தையா, அன்ரன், தனி, ஆசிர், கலாபதி, சங்கர்
போன்றோர் தனியாக இயங்க ஆரம்பித்தனர்.
தவிர, இன்னொரு குறித்த பகுதியினர் இரு பகுதியிடமுமிருந்து ஒதுங்கித் தமது சொந்த
வாழ்க்கையில் ஈடுபடுகின்றனர். செல்லக்கிளி, சித்தப்பா, ஜோன், குமரப்பா, காத்தான்
போன்றோர் ஒதுங்கிச் செல்கின்றனர். இங்கு பிரபாகரனின் தன்னிச்சையான செயற்பாடுகளுக்கு
எதிராகப் போராடியவர்கள் சிலர் பிரபாகரனோடு இணைந்து கொண்டமை விரக்கிதியையும்
வெறுப்பையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியிருந்தது ஏதோ உண்மை தான்.
பல காத தூரங்களை நடந்தே கடந்து சென்று இயக்க வேலைகளில் ஈடுபடும் வேளைகளில் எல்லாம்
வெளி உலகிற்குத் தெரியாமல் எமக்குள்ளே நடந்த அணிசேர்க்கை மறுபடி மறுபடி
நினைவுகளிற்கு வந்துசெல்லும்.
நாம் தனிக் குழுவாகச் செயற்பட ஆரம்பித்த பின்னர் அதன் முதலாவது நடவடிக்கையாக ‘புதிய
பாதை’ என்ற பத்திரிகையை வெளியிட ஆரம்பிக்கிறோம். குமணன் நாகராஜா, நந்தன், சாந்தன்
போன்றோர் இந்தப் பத்திரிகையில் எமது நோக்கங்களை எழுத ஆரம்பித்தனர். சுந்தரம்
துடிப்பான இயங்கு சக்தியாகத் தொழிற்பட்டார். அழகன், நந்தன், நெப்போலியன் போன்ற
அனைத்து உறுப்பினர்களும் எதிர்காலம் குறித்த ஆரோக்கியமான விவாதங்களையும்
கருத்துப்பரிமாறல்களையும் நடத்துவோம்.
அதே வேளை பிரபாகரனோடு இணைந்தவர்கள் ‘உணர்வு’ என்ற பத்திரிகையை வெளியிட
ஆரம்பிக்கின்றனர்.
இரண்டு குழுவிற்குமிடையே பெரியளவிலான தொடர்புகள் இருந்திருக்கவில்லை. ஆனால்
ஆதரவாளர்கள் பலர் சமரச முயற்சிக்கு முனைகின்றனர்.
ஆதரவாளர்களுக்கும் உறுப்பினர்களுக்குமாக ரோனியோ செய்யப்பட்ட துண்டுப்பிரசுரம் ஒன்று
பிரபாகரன் குழுவினரால் வினியோகிக்கப்படுகிறது. இந்தப் பிரசுரத்தை வெளியிடுவதில்
வெகுஜன வேலைகள் குறித்துப் பேசியவர்களும்இ இடதுசாரியம் குறித்துப் பேசியவர்களும்
பங்களித்திருந்தமை வேதனையளிப்பதாக அமைந்திருந்தது.
அப்பிரசுரம் வருமாறு:
“எமது இயக்கத்தில் ஒரு சதிச் செயல் நடைபெற்று முறியடிக்கப்பட்டாலும் ஒரு சிறு
பாதிப்பு ஏற்பட்டே விட்டது. இதை நீக்கும் முகமாக எம்மியக்கத் தோழர்கள்
அயராதுழைக்கின்றார்கள்.
பதவி ஆசை, தெளிவற்ற அரசியல் ஞானம், கட்டுப்பாட்டுக்கு அமையாத தன்மை, முதுகில்
குத்தும் முயற்சிகள்இ இயக்கத் தோழர்களை குழப்பல், தனிமனிதனைச் சர்வாதிகாரியாகக்
காட்டல், இயக்க நடவடிக்கைகளைப் பழித்தல், பயங்கரவாதிகள் என வர்ணித்தல் என்பன சதிச்
செயல்களில் அமைந்திருந்தன.
தொடர்ந்தும் பழிவாங்கக் காத்திருக்கும்தன்மை சந்தேகங்கள் நம்பிக்கையின்மை தவறான
அணுகுமுறையினால் ஏற்பட்ட பிழையான நடவடிக்கைகள் பிழையான விளக்கங்களால் ஏற்ப்பட்ட
கொந்தளிப்புக்கள் சதிச் செயலின் உச்சக்கட்டமாக அமைந்தது. அமைப்பு மாற்றம் என்பதை
அடிப்படையாகக் கொண்டு சில கலைப்புவாதிகள் இயக்கத்தை அடக்கும் சந்தர்ப்பவாதத்தை
மேற்கொண்டனர். அதாவது வெகுசன அமைப்புடன் கூடிய இராணுவத்தை கட்டியெழுப்புவதைஇ புதிய
அமைப்பாவதை இந்தியாவில் நின்ற கரிகாலனும் சதிகாரர்களால் வர்ணிக்கப்பட்ட கரிகாலனின்
விசுவாசிகளும் தடைசெய்வார்கள் என்ற பிரச்சாரம்: இயக்க ஆரம்ப காலங்களில் இயக்கத்தில்
நடைபெற்ற களையெடுப்புக்களுக்கு கரிகாலனே காரணம் என்ற பிரச்சாரமும்இ இயக்கத்
தோழர்கள் மத்தியில் விசமத்தனமாக பரப்பப்பட்டது.
இலங்கைத்தீவிலே எமது பண்ணைகளுக்கும் புதிய அங்கத்தவர்களுக்கும் பொறுப்பாக இருந்த
ஐயா, குமணன் போன்ற பொறுப்பான உறுப்பினர்கள் பொறுப்பற்ற முறையில் தனிநபர் தாக்குதலை
(கரிகாலன்) தொடுத்தும்இ இயக்கத்தைப் பற்றிய தவறான எண்ணங்களையும் வளர்த்தும்
வந்தனர். இவர்கள் கரிகாலன் போன்றோர் இந்தியாவிலிருந்து வரமுன்னர் ஓர் சதிக்குழுவைக்
கூட்டி புலி அமைப்பை சேர்த்து அழித்துவிட்டுஇ மக்கள் இயக்கம் என்று கூறி இலங்கைத்
தீவில் பெரும்பாலும் இடதுசாரிகளின் வழியில் சிவப்புச்சாயக் கட்சியை உருவாக்கத்
தலைப்பட்டனர்.
எமது கடந்தகால இராணுவ நடவடிக்கைகள் தேவையற்றது, பயனற்றது, இதனால் மக்களுக்கு தீமையே
விளைந்தது வேறு பயனில்லை என்றனர். கடந்தகால நிகழ்வுகள் பச்சையான பயங்கரவாதம் என்று
வர்ணித்தனர். எமது குழு மார்வியா கும்பல், கார்லோஸ் கோஷ்டி எனக் கூறப்பட்டது.
ஆனால் இப்படி விமர்சித்தவர்களுக்கு மார்வியா, கார்லோஸ் போன்றவர்களைப்பற்றி
தெரியாது. புலியமைப்பு தேவையில்லை எனவும் நாங்கள் மக்கள் அமைப்பாக மாறி புலி
அமைப்பை இல்லமல் செய்து விட வேண்டுமென்றும் துப்பாக்கிகள் ஏன்? வெறும் மக்கள்
இயக்கமாக மாறினால் மக்களே சமாளித்துக் கொள்ளுவார்கள் என்றும் கூறினர்.
கரிகாலனின் விசுவாசிகள் என அவர்களால் கூறப்பட்டவர்கள் மீது தனிநபர் விமர்சனம்
காரசாரமாக நடந்தது. அத்தனையும் அவர்களின் முதுகுக்குப் பின்னால் நிகழ்ந்தது.
இயக்கத்தின் சில சம்பவங்களை ஆங்காங்கே பொறுக்கியெடுத்து இச்சம்பவங்களின் வரலாற்றுப்
பின்னணியையும் சூழ்நிலைகளையும் ஆராயவோ, முன்னெடுத்து வைக்கவோ செய்யாது
அச்சம்பவங்கள் இயக்கத் தோழர்கள் மத்தியில் வெறுமனே தூக்கிப் போடப்பட்டது. இதே
அங்கத்தவர்களைக் குழப்பி அவர்களிடையே சந்தேகத்தை வளர்க்கத் தொடங்கியது. இச் செயலின்
ஊடே வல்வெட்டித்துறை வாதம் முன்வைக்கப்பட்டு வல்வெட்டித்துறை மக்களையே
இழிந்துரைக்கும் அளவிற்கு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.
கரிகாலனும் அவர்போன்றோரும் மக்கள் மத்தியில் இறங்கி வேலை செய்வதை அனுமதிக்க
மாட்டார்கள்எனவும் ; வெறும் இராணுவ வெறிபிடித்த பயங்கரவாதக் குழுவாகவே இருக்க
விரும்புவார்கள் எனவும் அடித்துக் கூறப்பட்டது.
இயக்கத்தின் போக்கை விமாசித்தவர்கள்இ இயக்கத்தின் முக்கிய பகுதிகளில் இருந்தார்கள்.
இவர்கள் மத்திய குழுவின் மீது குற்றம் சுமத்தாமல் கரிகாலனே முழுப்பொறுப்புக்கு
உரியவர் என்று எடுத்துக் கூறினர்.
இதுவரை காலமும் எம் இயக்கம் மத்திய குழுவின் கட்டுப்பாட்டிலேயே இயங்கி வருகிறது.
தனிமனிதனின் ஆளுமைக்குட்பட்டு அல்ல.
ஆனால் கரிகாலன் அங்கத்தவர் மத்தில் செல்வாக்கு பெற்றிருந்தார் என்பது உண்மை. ஆனால்
தனி மனித வழிபாடு செய்யப்படவில்லை. இயக்கத்தின் ஆரம்பகால உறுப்பினர் என்பதாலும்
இயக்க செயற்பாடுகளில் முன்நின்று செயற்பட்டதாலும் இயக்கத்தின் சகல அம்சங்களிலும்
தலையைக் கொடுத்து வேலை செய்ததாலும் அயராத உழைப்பாலும் இயக்கத் தோழர்கள் மத்தியில்
தனிச் செல்வாக்குப் பெற்றது இயல்பானதே.
சம உரிமை கொண்ட மத்தியகுழு அங்கத்தினர்கள் பலர் செயலாற்றல் அற்றவர்களாகவும்
இக்கட்டான நிலையில் பிரச்சனை தோன்றினால் அதைச் சமாளிக்கும் ஆற்றலோ உடனடித் தீர்வைக்
கொடுக்கும் தன்மையோ இல்லாதிருந்தனர். இதனால் எதற்கெடுத்தாலும் கரிகாலனையே அணுகினர்.
இயக்க ஆரம்ப வளர்ச்சி இத்தன்மையுடன் கூடியதால் ஏனைய மத்திய குழு உறுப்பினர்கள்
இந்நிலையைத் தொடர வழிவிட்டதால் கரிகாலனின் அனேக முடிவுகள் இயக்கமுடிவுகளாயிற்று.
இந்நிலைக்கு இயக்க மத்திய குழுவின் செயலற்ற தன்மைகளே காரணம். இயக்கச் சுற்றாடலில்
அமைப்புக்களின் தன்மையே கரிகாலனின் தீர்மானங்களை இயக்கத் தீர்மானங்கள் ஆக்கியதை
மறந்து அவர்கள் கரிகாலனை அருவருக்கத்தக்க சர்வாதிகாரியாக இயக்கத் தோழர்களிடம்
படம்பிடித்துக் காட்டினர். இவர்களை நம்பிய புதிய அங்கத்தவர்களிடமும் இயக்கத்தில்
உள்ள விசுவாசமான அங்கத்தவர்களிடமும் பெரிய குழப்பம் ஏற்பட்டது.
சுய விமர்சனம் என்பது கடந்தகால வரலாற்றை ஆராயக் கூடிய முறையில் ஆராய்ந்து அதன்
மூலம் இயக்கத்தை மேலும் உறுதியாக வளர்த்தெடுக்கும் இலட்சியத்தைப் பெற்றிடும்
வழிமுறைகளைக் கூர்மைப்படுத்தவுமே உதவ வேண்டுமே ஒழிய இயக்கத்தில் குழப்பங்களையோ,
அழிவுகளையோ ஏற்படுத்துவதற்காக அல்ல.
அத்துடன் சுயவிமர்சனம் என்ற போர்வையில் வழமையான கட்டுப்பாடுகளை மீறி எல்லோரும்
கன்னா பின்னா என்று கதைக்கவும் அனுமதித்தார்கள். அவ்வாறு கதைக்க அங்கத்தவர்களுக்கு
பொறுப்பில் இருந்த ஐயாஇ குமணன் போன்றோர் விளக்கம் அளிக்க முடியாமல் அவர்களின்
கதைகளை மேலும் சிக்கலாக்கி குழப்ப நிலைமையை மோசமாக்கி விட்டார்கள். இக்குழப்ப
நிலையின் உச்சக் கட்டத்தில் நாம் ஒன்று கூடுதல் தவிர்க்க முடியாததாயிற்று. இதனால்
பொதுச்சபை கூட்டப்பட்டது.
சதிக்குழுவினர் தமது வெறுமையான மக்கள் அமைப்புத்திட்டத்திற்கு முரண்படக்
கூடியவர்களை ஒதுக்கித்தள்ள திட்டமிட்டார்கள். கூடப் போகும் பொதுச்சபையில் தம்
கருத்துடன் இணையக் கூடியவர்களையும் ஆதரவாளர்களையும் அமர்த்த இருந்தனர்.
மத்திய குழுவைக் கலைப்பதன் மூலம் அதிலுள்ளவர்களை அதிகாரமற்றவர்கள் ஆக்கி அதற்குள்ளே
ஐயா, சிவனடியார் இருந்தாலும் கரிகாலன் போன்றோரையே ஒதுக்கக் குறி பார்க்கப்பட்டது.
அதன்படி ஐயா, சிவனடியார் அதிகாரம் பின்னணியில் இருக்கத் தக்க வகையில் புதிய குழு
அமைக்கத் திட்டமிடப்பட்டது. இதன்படி யாவரும் இலங்கைத்தீவு வந்தடைந்ததும் மத்திய
குழு கூடி சில போலியான சுயவிமர்சனம் செய்து தன்னைத் தானே கலைத்துக் கொண்டது.
பொதுக்குழு கூடி ஐயா போன்றோரின் சிபார்சில் புதிய தற்காலிக செயற்குழு தெரிவு
செய்யப்பட்டது. இதைக் கரிகாலனோ உண்மையான இயக்கப் பற்றுடைய தோழர்களோ எவ்வித சந்தேகக்
கண் கொண்டும் நோக்காது அவர்களின் உள்நோக்கங்களை அறியாது சம்மதித்தனர்.
இதன்பின் இவர்களுடைய துர்ப்பிரசார விடயங்களும் இயக்கத்தைப் பற்றிய துரோகத்தனமான
விமர்சனங்களும் உண்மையான இயக்கத் தோழர்களுக்கு எட்டியது. சதிகளில் பங்குபற்றிய
புதிய அங்கத்தினர்கள் கரிகாலனைப் பற்றிக் கூறப்பட்ட வாதங்கள் பிழையானதெனக்
கரிகாலனின் சொல்லிலும் செயலிலும் கண்டு கொண்டனர்.
இயக்கத்தை பிழையான வழியிலிருந்து உண்மையான பாதையில் இட்டுச் செல்லப்படுவதாக கருதிய
புதிய அங்கத்தினர் நாளடைவில் தாம் தவறு செய்து விட்டதை உணர்ந்தனர். சதிகாரரின் ஒரு
பக்க நியாயங்களை கேட்டு ஏமாந்ததை உணர்ந்தனர். இந்நிலையில் நிலைமை வேறுவிதமாக
கொந்தளிக்க தொடங்கியது.
புதிய அமைப்பினர் ஆயுதங்களை நிராகரித்து இராணுவ முழுமையாக சிதைக்க ஆரம்பித்ததைக்
கண்டு கொண்டனர். அவர்கள் ஒரு அரசியல் கட்சியை உருவாக்கி பிறகு அதன் மூலம் ஒரு
இராணுவ அமைப்பை உருவாக்கப் போவதாகவும் இப்போதுள்ள அமைப்பை முற்றாக கலைக்கப்
போவதாகவும் கூறத் தலைப்பட்டனர்.
இது அங்கத்தினர்களிடையே சோர்வையும் அவநம்பிக்கையையும் ஏற்படுத்தியது. இதனால்
அவர்கள் புதிய அமைப்பின் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானத்தையும் சதிகாரர்காளால்
கூறப்பட்ட பொய்யான விமர்சனங்களை அம்பலப்படுத்த நேருக்கு நேர் எல்லா
அங்கத்தினர்களும் தெரிந்து கொள்ள மீண்டும் பொதுச்சபை கூட்டுமாறும் வலியுறுத்தினர்.
கரிகாலனும் தன்னைப்பற்றிய பிழையான குற்றச்சாட்டுகளுக்கும் புதிய அமைப்பின் தற்காலிக
செயற்குழுவிடம் நீதி கேட்டார். குற்றவாளியெனில் தண்டிக்கும் படியும் இல்லையெனில்
இதற்கு பொறுப்பானவர்களை அத்தவறான பிரச்சாரங்களை அங்கத்தினர் மத்தியில் இருந்து
நீக்கும் படியும் கோரினார். ஆனால் சதிகாரர் பொதுச்சபையில் சந்திக்க மறுத்து
விட்டனர்.
தலைக்கு மேலே வெள்ளம் ஏறிய நிலையைக் கண்ட சதிகாரர் இயக்க இரகசிய இடங்களில் இருந்து
ஆயுதங்களைக் கைப்பற்ற முனைந்தனர். அவ்வாறு சில இடங்களில் இருந்து தம் புதிய
அதிகாரங்களைப் பயன்படுத்தி அப்பாவி அங்கத்தினரை ஏமாற்றி ஆயுதங்களை கைப்பற்றினர்.
இக்குட்டு அம்பலமாகவே எல்லோர் மத்தியிலும் குற்றவாளிகளாயினர்.
இதனால் இயக்கத்திலிருந்து வெளியேறி தப்புவது ஒரே வழியெனக் கண்டனர். கைப்பற்றிய
ஆயுதங்களை திருப்பிக் கொடுக்க வேண்டிய நிர்ப்பந்த நிலைக்கும் புலி அமைப்பை
அழிக்கவிருந்த அவர்கள் இயக்க உடைமைகளை எடுத்துச் செல்ல முடியாத நிலைக்கும்
ஆளாகினர்.
இந்நிலையில் தான் தாம் கைப்பற்றிய உடைமைகளை இயக்கத்திடம் தாராள நோக்குடனும்
பெருந்தன்மையுடனும் விட்டுச் செல்வதாக சொல்லிக் கொண்டனர். எமது வெளி அமைப்பின்
ஆரம்ப வேலைத்திட்டங்களைக் கைப்பற்ற முனைந்து தோல்வியடைந்தனர். கடந்த எட்டு மாத
காலமாக இயக்கத்துக்குள் இருந்து கொண்டு பல நாசவேலைகளை செய்து வெளியேறி விட்ட பதின்
மூவரில் எழுவர் புதியவர்களாகும்.
இப்புதியவர்கள் ஆரம்ப காலம் தொட்டே ஐயா, குமணன் போன்றோரிடமே தொடர்பு
கொண்டிருந்தார்கள். மேலும் அவர்களின் மூளை சதிகாரரினால் நன்கு கழுவப்பட்டு பொய்கள்
திணிக்கப்பட்டள்ளது. அப்புதிய விலகிச் சென்ற அங்கத்தினர்கள் தம் நிலையை உணரும்
காலம் அதிக தூரத்தில் இல்லை.
விலகிச் சென்றவர்களின் விலகலை நாம் அங்கீகரிக்கவில்லை. அவர்களில்லாமலே
அவர்களைப்பற்றிய விசாரணை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. குற்றவாளிகள் தவிர்ந்த
பிழையான வழியில் இட்டுச் செல்லப்பட்டவர்கள் மீண்டும் வந்து இயக்க நிபந்தனையுடன்
அனுமதிப்போம். மேலும் இச்சிக்கல்களால் சிலர் மிகவும் மனமுடைந்தார்கள். அவர்களை
மாற்றி உற்சாகத்துடன் வேலைசெய்யும் பொறுப்பு எம்மிடம் உண்டு.
மேலும் பொறுப்பு வாய்ந்த இயக்கத் தோழர்கள் விலகிச் சென்றவர்களை திரும்பவும் இணைக்க
முயற்சி செய்தார்கள். இதற்கு நாம் ஆதரவு அளித்ததோடு சமாதானக்காரரிடமும் பொதுக்குழு
கூட்டப்பட வேண்டிய அவசியத்தையும் அதை விட வேறு நிபந்தனைகள் இடப்போவதில்லை யென்றும்
கூறினோம். மத்திய குழுவை கலைத்து பொதுக்குழுவை கூட்ட மறுத்து முதற்கூடிய
பொதுக்குழுவின் படி தெரிவு செய்யப்பட்ட தற்காலிக செயற்குழுவை அங்கீகரித்து
தொடர்ந்து செயலாற்ற உடன்பட்டால் இணைவதாக கூறினர் சதிகாரர்.
நாம் அத்தற்காலிக செயற்குழுவை அங்கீகரித்து பொதுக்குழு கூடவேண்டிய அவசியத்தை
வற்புறுத்தினோம். சில விடயங்களில் அவர்களுக்கு விட்டுக்கொடுத்து நடந்தும் கூட
ஒற்றுமை ஏற்பட முடியாமல் போய் விட்டது.
இவ்வளவு குழப்பம் ஏற்றட்ட பிறகும் பொதுக்குழு சரியான விளக்கம் அளிக்காது இயங்க
முடியாதென்பதே எமது வாதம். இதனால் இணைப்பை ஏற்படத்த முன் நின்ற இயக்க அங்கத்தினர்
கலைப்பு வாதிகளின் சதிச் செயல்களையும் குதர்க்க வாதங்களையும் உள் நோக்கங்களையும்
கண்டு கொண்டனர். இதனால் அவர்கள் ஒற்றுமை முயற்சியைக் கைவிட்டனர். எரிமலை வெடித்தது.
வழிந்து ஓய்ந்து உள்ளது.
எரிமலை வெடிப்பின் காரணங்களை அறிந்து ஆராய்ந்து தோன்றியதற்கான நிலைமைகளை தெரிந்து
கொள்ள முயல்கிறோம். இம் முயற்சி இயக்கத்தை உறுதியாக வளர்த்தெடுக்கவும் இவ்வாறான
சம்பவங்கள் ஏற்படாது தவிர்க்கவும் வாய்ப்பாக இருக்கும். மொத்தத்தில் எமது
தோழர்களின் அரசியல் சித்தாந்த வறுமையே எல்லாவற்றுக்கும் காரணமாக இருக்கிறது. இதனால்
அரசியல் தெளிவுடன் அனைவரும் செயல்பட்டு இராணுவ அமைப்புடன் இணைந்து கொள்வார்கள்
எனின் உண்மையான விடுதலை வீரர்களாக மாறுவார்கள். இத்தயாரிப்புக்களில் ஈடுபடவும்;
செயற்படவும், சீரமைக்கவும் , மத்திய குழுவிற்காக தற்காலிக செயற்குழு தெரிவு
செய்யப்பட்டுள்ளது. மேலும் வெகுவிரைவில் மத்தியகுழு செயற்படத் தொடங்கும்.
தற்காலிக செயற்குழு
(செயற்குழு சார்பில்)”
இங்கு ஐயா என்பது என்னையும், கரிகாலன் என்பது பிரபாகரனையும், சிவனடியார் என்பது
நாகராஜாவையும் குறிப்பிடுவதாகும்.
இத்துண்டுப் பிரசுரம் வெளியிடப்பட்டு 13 வருடங்களின் பின்னர் 90 களில்
கனடாவிலிருந்து வெளியாகும் தாயகம் இதழில் பிரசுரமாகியிருந்தது.
மக்கள் அமைப்புக்களை உருவாக்குவது குறித்த மார்க்சிய வழிமுறை தொடர்பாகப் பேசிய
எம்மையே இடதுசாரிகள் வழியில் சிவப்புச்சாயக் கட்சியை உருவாக்கும் முயற்சி என்று
குறிப்பிடுகின்றனர். தவிர, ஆரம்ப காலத்தில் குமணனும் பின்னதாக சுந்தரமும் மாபியாக்
கும்பல், கர்லோஸ் கும்பல் என்று பிரபாகரன் சார்ந்தவர்களைக் குறிப்பிடனர் என்பது
துரதிர்ஸ்டவசமானது. முதலில் சமூக வரம்புகளை எல்லாம் மீறி மக்களின் வாழ்வலங்களைக்
கண்டு கோபம்கொண்டு இணைந்து கொண்டவர்களின் ஒரு பகுதியினரின் வழிமுறை தவறானது என
விமர்சிபதை அவர்கள் மீதான தனிமனித தாக்குதல்களிலிருந்து ஆரம்பிக்க முடியாது.
இதன் இன்னொரு புறத்தில் வல்வெட்டித்துறை ஆதிக்கம் குறித்த கருத்துக்களும்
முன்வைக்கப்பட்டன. மத்திய குழுவில் நானும், சிவனடியார் எனக் குறிக்கப்படும்
நாகராஜாவும், பிரபாகரன் மீதான விமர்சனத்தை முன்வைக்க அதனை ஆழப்படுத்திய சுந்தரம்
போன்றோர் அவரின் மீதான தனிப்பட்ட தாக்குதலாக முன்னெடுத்தனர். மத்திய குழுவிற்கு
ஆரம்பகாலக் ‘களையெடுப்பு’ களிற்கு மௌனமாக இருந்த பொறுபை நாங்கள் சுயவிமர்சனம்
செய்துகொள்ளவில்லை என்பது கூட மறுபக்கத் தவறு.
அப்போது சுந்தரம் புதிய உறுப்பினர் என்பதால் பிரபாகரன் சார்ந்த குழுவினரின்
முழுமையான கோபம் என்பது என்மீதும், நாகராஜா மற்றும் குமணன் மீதும் தான் அதிகமாக
ஒருமைப்படுத்தப்பட்டிருந்தது. அதன் வெளிப்பாட்டைத் துண்டுப்பிரசுரத்திலும் காணலாம்.
பிரசுரத்தில் கூறப்பட்டிருப்பது போல இனிவரும் சில மாதங்கள் எமக்கிடையேயான சமரச
முயற்சிகளின் காலமாகக் கடந்துபோனது. பல தடவை இணைவுகளும் பிரிவுகளும் வந்து
போயின.சமரச முயற்சிகளின் போது நடந்த சம்பவங்கள் இன்றைய வரலாற்று மீட்சியோடும் ஒப்பு
நோக்கத் தக்கவை.
பலர் எம்மிடையேயான சமரச் முயற்சிகளில் ஈடுபடுகின்றனர். அவர்களுள் இப்போது புளட்
இயக்கதின் தலைவராக இருக்கும் சித்தார்தனும் ஒருவர்.
(இன்னும்வரும்..)
குறிப்பு: மேலதிக ஆவணங்களுடன் அச்சு நூலாக வெளிவரவரவிருக்கும் இத் தொடர்,இன்னும்
சில பதிவுகளின் பின்னர் முடிவுறும். அந்தக் கால வெளிக்குள் கட்டுரையாளர் ஐயரின்
நேர்காணல் ஒன்றை வெளியிட ஆலோசித்துள்ளோம். இந்த நேர்காணலின் ஒரு பகுதி
அச்சுப்பதிவாகும்  நூலின் பின்னிணைப்பிலும்  இனியொருவிலும்  சில நாட்களில்
பதியப்படும். இனியொரு வாசகர்கள், ஆர்வலர்கள், படைப்பாளிகள் இந்த நேர்காணலுக்கான
வினாக்களை இங்கே பின்னூட்டமாகப் பதிவிடலாம்.

No comments:

Post a Comment