Friday, November 5, 2010

17- நாம் செல்லும் திசை தவறானது – புலிகளுள் துளிர்விடும் அதிர்ப்தி

கும்பகோணத்தைச் சேர்ந்த மேகநாதன் என்ற திராவிடர் கழக உறுப்பினர் எம்மோடு முழு நேர
உறுப்பினராக வேலை செய்கிறார். ஐயர் ஒருவர் இயக்கத்தில் ,அதிலும் மத்திய குழுவில்
பணியாற்றுவதாக கேள்விப்பட்டதும், ஐயரையெல்லாம் ஏன் சேர்த்துக்கொண்டீர்கள் எனக்
கடிந்து கொண்டிருக்கிறார். பின்னதாக அவர் என்னைச் சந்தித்ததும் தனது அபிப்பிராயத்தை
முழுமையாக மாற்றிக்கொண்டதாக என்னிடமே சொன்னார்.
மேகநாதன் உமாமகேஸ்வரனைக் கொலைசெய்ய நாம் தேடியலைந்ததைக் கண்டு மிரண்டுபோனார்.
அவரும் இதையெல்லாம் விட்டுவிடுங்கள் என்று தனது கருத்தை முன்வைக்கிறார். எமக்குச்
சில ஆலோசனைகளும் வழங்குகிறார். என்னிடம் கூடத் தனிப்படப் பேசிப்பார்த்தார். எம்மைப்
பொறுத்தவரை நமது வழிமுறை சரியானது என்ற இறுமாப்பில் தான் இருந்தோம்.
பின்னதாகப் சில உறுப்பினர்கள் இதெல்லாம் கலாபதியின் வேலையென்றும் அவர்தான்
பிரபாகரனுக்குத் தலைமை ஆசையைத் தூண்டிவிட்டவர் என்றும் உமமகேஸ்வரனின் புறக்கணிக்கத்
தக்க பாலியல் பிரச்சனையை முதன்மைப்படுத்தியவர் என்றும் கருத ஆரம்பித்தனர். இது
குறித்துப் பலர் என்னிடம் பின்னாளில் அபிப்பிராயம் தெரிவித்தனர்.
கலாபதி குறித்த இந்த அபிப்பிராயம் பின்நாளில் நிகழந்த பல சம்பவங்களிலும்
வெளிப்பட்டதாகக் கூறியவர்களும் உண்டு.
இப்போது உமாமகேஸ்வரனோடு எமக்கு எந்தத் தொடர்பும் இல்லை. அவரைத் தவிர அவருக்காக
அன்று இயக்கத்திலிருந்து யாரும் பிரிந்து செல்லவில்லை. இந்தியாவிலேயே எமது
கண்களுக்குப் படாமல் தலைமறைவாகிவிடுகிறார். ஊர்மிளாவோடு நாங்கள் எந்தத்
தொடர்புகளையும் பேணிக்கொள்ள விரும்பவில்லை. தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்கும்
உமாமகேஸ்வரனுக்கும் இடையான தொடர்பு பின்பு ஒரு போதும் ஏற்பட்டதில்லை. ஊர்மிளா சில
காலங்களின் பின்னர் நோய்வாய்ப்பட்டு இறந்ததாகக் கூறப்பட்டாலும் வேறுபட்ட
கருத்துக்களும் நிலவுகின்றன.
இப்போது ஒவ்வொருவருக்கும் அதிகப்படியான பொறுப்புக்கள் வழங்கப்பட்டு இலங்கைக்கு
அனுப்புவதாகத் தீர்மானிக்கப்படுகிறது. இலங்கையில் மத்திய குழுவில் பொறுப்பனாவர்கள்
யாரும் இல்லை என்பதாலும் எமது இயக்க நடவடிக்கைகளைக் கவனிக்க வேண்டும் என்பதாலும்
நான் முதலில் இலங்கை செல்வதாகத் தீர்மானிக்கப்படுகிறது.
உமாமகேஸ்வரனுக்கு தண்டையார்பேட்டை வீட்டு அறியப்பட்டது என்பதால் ஏதாவது பிரச்சனை
உருவாகலாம் என எண்ணினோம். இதனால் அந்த வீட்டைக் கைவிட்டு திருவான்மியூரில் ஒரு
வீட்டை ஒழுங்குபடுத்தி வாடகைக்கு அமர்த்திக்கொள்கிறோம். பாதுகாப்பு நடவடிக்கைகளில்
அதீத கவனம் செலுத்தும் பிரபாகரன் உமாமகேஸ்வரனைக் கூடப் பாதுகாப்பு அச்சுறுத்தலாகக்
கருதியமை வியப்புக்குரியதல்ல.
அந்த வீட்டில் நான் இரண்டு நாட்களே தங்கியிருக்கும் வாய்ப்புக் கிடைத்தது. இதன்
பின்னர் நான் குமரப்பா, சுந்தரம் ஆகியோர் எமது விசைப்படகில் இலங்கை நோக்கிப்
பயணமாகிறோம். நான் அங்கு இல்லாத வேளையில் இயக்கத்தின் மீதும் பிரபாகரனின்
சர்வாதிகாரப் போக்கின் மீதும் வெறுப்பும் விரக்தியும் அதிகரித்த நிலையில் அனைத்துப்
போராளிகளும் காணப்படுகின்றனர். பண்ணைகளுக்கு நான் சென்ற போது என்னிடம் இது குறித்து
பரவலாகப் பேசப்படுகிறது.
மைக்கல் பற்குணம் போன்றோரின் கொலை தொடர்பாக பிரபாகரன் குமணனிடம் கூறியிருந்தார்.
குமணன் ஊடாக அந்தச் செய்தி அனைத்துப் பண்ணைகளுக்கும் பரவிவிடுகிறது. இது பின்னதாக
மனோ மாஸ்டர், அழகன் போன்றோர் இயக்கத்தின் ஜனநாயகத் தன்மை குறித்தும் அதன் வழிமுறை
குறித்தும் போர்க்குரல் எழுப்புகின்றனர். சுந்தரமும் இவர்களோடு இணைந்து கொள்கிறார்.
பயிற்சி முகாம் ஒழுங்கமைக்கப்பட்ட முறை, அதனுள் பிரபாகரனின் தன்னிச்சையான
சர்வாதிகாரப் போக்கு, பற்குணம், மைக்கல் கொலைச் சம்பவங்கள்,உமாமகேஸ்வரன் குறித்த
பிரச்சனைகள் என்று அனைத்தும் ஒருங்கு சேர பிரபாகரனுக்கு எதிரான போக்கு ஒன்று
இயக்கத்தின் அனைத்து மட்டத்திலும் உருவாகி வளர்கிறது.
நான் அங்கு சென்ற முதல் நாளே மனோ மாஸ்டருடன் இன்னும் சிலர் என்னிடம் தமது
அதிர்ப்தியை வெளிப்படுத்துகின்றனர். இதற்கெதிரான உட்கட்சிப் போராட்டத்தில்
என்னையும் இணைந்துகொள்ளுமாறு கோருகின்றனர். 79 இன் மத்திய பகுதி இவ்வாறு
இயக்கத்தில் கொந்தளிப்பு ஏற்பட்ட காலகட்டமாகும். அவ்வேளையில் இவை குறித்து நான்
சிந்திக்க ஆரம்பிக்கிறேன்.
எது எவ்வாறாயினும் பதினேழு வயதில் அனைத்தையும் துறந்து தேசிய இன ஒடுக்குமுறைக்கு
எதிரான போராட்டத்தில் தன்னை இணைத்துக்கொண்ட பிரபாகரனுக்கு இவைபற்றி இதுவரை யாரும்
கூறியதில்லை. பிரபாகரனுடன் தவறுகள் குறித்துப் பேசினால் தனது வழிமுறையை
மாற்றிக்கொள்ள வாய்ப்புண்டு என்பதே எனது தனிப்பட்ட கருத்தாக ஆரம்பத்தில் அமைந்தது.
திருகோண்மலையிலுள்ள தொடர்புகளைக் கையாளும் பொறுப்பு குமணனிடமே இருந்தது.
அங்கிருந்தவர்கள் எல்லாம் மார்க்சிய கம்யூனிசத் தத்துவங்களோடு அறிமுகமானவர்களாக
இருந்தனர். பயஸ் மாஸ்டர் என்பர் விடுதலைப் போராட்டத்தில் ஆர்வமுடையவர்களுக்கு
மார்க்சிய அரசியலைக் கற்றுத்தந்தார். திருகோணமலைக்குக் குமணன் செல்லும்
வேளைகளிலெல்லாம் அங்கிருந்தோர் அவரிடம் கேள்விகளைக் கேட்க ஆரம்பித்திருந்தனர்.
அவற்றிற்குப் பதில் சொல்லவேண்டும் என்ற நிர்ப்பந்தத்தில் குமணனும் மார்க்சிய
நூல்களைக் கற்க ஆரம்பித்திருந்தார்.
இது தவிர மனோமாஸ்டர். நந்தன் போன்றோர் மார்க்சியக் கல்வியுடன் ஏற்கனவே
பரீட்சயமாகியிருந்தனர். இதனால் குமணனில் ஆரம்பித்து விடுதலைப் புலிகள் அமைப்பில்
ஒரு பிரிவினர் மார்க்சிய நூல்களை கற்பதில் ஆர்வமுடையோராக முயற்சி மேற் கொண்டனர்.
பின் நாளில் விடுதலைப் புலிகளின் பிரதித் தலைவராகவிருந்து அவர்களாலேயே இந்திய
உளவாளி எனக் குற்றம்சாட்டப்பட்டுக் கொலைசெய்யப்பட்ட மாத்தையாவை எங்குபார்த்தாலும்
சிவப்பு மட்டைகளோடு கூடிய மார்க்சிய நூலகளுடனேயே காணமுடியும். ஒரு தடவை நந்தன்
மாத்தையாவைக் நோக்கி நூல்களை உண்மையில் வாசிக்காமல் அவற்றை வாசிப்பது போலப் போலியாக
மற்றவர்களுக்குக் காட்டுவதற்காகவே அவற்றுடன் காணப்படுவதாகக் குறிப்பிட்டார்.
மார்க்சிய நூல்களை வாசிப்பது என்பதே எமக்கு மத்தியில் ஒரு அங்கீகாரம் என்கிற
அளவிற்கு ஒரு அலைபோல அனைத்து மட்டங்களிலும் அது பரவியிருந்தது. மாத்தையாவும்
பிரபாகரனின் சர்வாதிகாரப் போக்கிற்கு எதிராக மிகத் தீவிரமாகக் கருத்துக்களை
முன்வைத்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்தக் காலப்பகுதியில் நான் குமணனின் வீட்டில்தான் தங்குவது வழமை.குமணனோ பழைய
போராட்ட வரலாறுகள் குறித்த நூல்களைப் படித்துக்கொண்டிருந்தார்.
மிகக் குறுகிய காலத்தில் பல நூல்களை படித்திருந்தார். நிறைய நூல்களையும்
வைத்திருந்தார். அவற்றை வாசிக்குமாறு என்னையும் வற்புறுத்தினார். அன்டன்
பாலசிங்கத்தின் அரசியல் வகுப்புக்களுக்கு சென்று வந்த வேளைகளில் அவர் கற்பித்த
இயக்கவியல் பொருள்முதல்வாதம் போன்ற எதுவுமே விளங்கிக்கொள்ள முடியாத சிதம்பர சக்கரம்
போல் இருந்ததால் நான் ஆரம்பத்தில் அதிக ஆர்வம் காட்டவில்லை.
அங்கேயே நான் தங்கியிருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதால் தவிர்க்க முடியாதவகையில்
சில நூல்களை படிக்க முற்படுகிறேன். லெனினின் வாழ்க்கை வரலாறு, போல்சுவிக் கட்சி
வரலாறு, அதிகாலையின் அமைதியில், ரஷ்யாவில் நரோட்னிக்குகள் குறித்த பிரச்சனை,
அராஜகவாதம் குறித்த நூல்கள், சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கைத் திட்டம்,
மவோவின் இராணுவப் படைப்புக்கள் என்று குறிப்பான நூல்களை எனது வாழ்வின் முதல்
தடவையாகப் வாசிபிற்கு உட்படுத்தும் வாய்ப்பு ஏற்படுகிறது. எல்லாமே மார்க்சிய
நூல்கள் தான். அன்டன் பாலசிங்கம் ஒப்புவித்த வேளையில் புரிந்துகொள்ள முடியாதவற்றை
எமது இயக்கத்தின் நடைமுறைகளோடு ஒப்பிட்டுப் படிக்கும் போது அவையெல்லாம் எமக்;காக
எழுதப்பட்டவை போன்ற புத்துணர்வு ஏற்பட்டது.
முதலில் நான் படித்த நூல் லெனினின் வாழ்க்கை வரலாறு. யாரோ ஒரு மனிதனின் வாழ்க்கை
வரலாறு என்ற வகையில் தான் நான் ஆரம்பித்தேன். அதில் சொல்லப்பட்ட விடயங்கள் எமது
இயக்கத்தில் உருவாகியிருந்த பல பிரச்சனைகளுக்குத் தீர்வை முன்வைப்பதக
அமைந்திருந்ததைக் காணக்கூடியதாக இருந்தது.
லெனினுடைய சகோதரர் நரோட்னிக் என்று அழைக்கப்பட்ட அமைப்பில் இருந்தவர். ஸார்
குடும்பத்தின் ஆட்சிக்கு எதிராக அவர் போராடுகின்றார். தனிமனிதப் படுகொலைகளை
மேற்கொள்வதன் மூலமே விடுதலைப் போராட்டத்தை வளர்க்க முடியும் என்ற கருத்தை
முன்வைக்கிறார். இறுதியில் தூக்குத் தண்டனை வழங்கப்பட்டு மரணமடைகிறார். லெனின்
அவரது சகோதரரின் வழிமுறை தவறானது என வாதாடுகிறார்.
அராஜகவாத வழிமுறை என்று சொல்லப்பட்ட இந்த வழிமுறைக்கு எதிராக புதிய திசைவழியை
முன்வைத்து சமூகத்தில் மக்களை அணிதிரட்டுகிறார். நாடு முழுவதும் சென்று வெகுஜனங்களை
அமைப்பாக்குகிறார். அவர்களது நாளாந்தப் பிரச்சனைகளை முன்வைத்தே மக்களை
அணியாக்குகிறார். போராட்டத்தை வெற்றியை நோக்கி நகர்த்திச் செல்கிறார்.
விடுதலைப் புலிகளைப் பொறுத்த வரையில் தனிமனிதப் படுகொலைகளிலிருந்தே அனைத்தும்
ஆரம்பமாகியிருந்தது. மக்களோடு எமக்கு எந்தத் தொடர்பும் இருந்ததில்லை. மக்கள்
போராடுவதற்காக அணிதிரட்டப்படவில்லை. அவர்கள் எமது வீரச் செயல்களை ரசிக்கும்
பார்வையாளர்களாகவே தொடர்ந்தனர். அனைத்திற்கும் மேலாக நான் உட்பட பலரும்
விடுதலைக்காத் தான் கொலைகளை மேற்கொள்கிறோம் என நம்பியிருந்தோம். ஆனால்
எதற்கெடுத்தாலும் கொலை, கொலை என்பது துரையப்பாவில் ஆரம்பித்து
தொடர்ந்துகொண்டிருந்து விரக்தியையே தருவதாக அமைந்தது.
நரோட்னிக்குகளின் நடவடிக்கைகள் என்பதுதான் நாம் இராணுவத்தைக் கட்டமைப்பது என்ற
பெயரில் முன்னெடுத்துக்கொண்டிருந்தோம் என்பது அப்போது தான் புரிந்துகொள்ள
முடிந்தது.
முதல் தடவையாக வேறு ஒரு வழிமுறையும் விடுதலைப் போராட்டத்தை முன்னெடுக்க எமக்கு
முன்னால் இருப்பதாக உணர்ந்து கொள்கிறேன்.
எனக்குள்ளே ஒரு புதிய இரத்தம் பாய்ச்சியது போன்ற இனம்புரியாத உணர்வு மேலிட்டது.
நான் கற்றுக்கொண்டவை எமது நடவடிக்கைகள் போன்றவற்றின் அவற்றுடனான தொடர்ச்சி என்பன
குறித்து மனோமாஸ்டர், நந்தன், மாத்தையா, குமணன் போன்ற பலரும் விவாதிப்போம்.
மாவோவின் இராணுவப்படைப்புகள் மக்கள் இராணுவத்தை எப்படி வெற்றிகரமாகக் கட்டமைப்பது
எனக்க் கற்றுத்தந்தது. அவர்கள் எப்படி மக்கள் மத்தியில் வெகுஜன வேலைகளை
முன்னெடுத்தார்கள், மக்களோடு இணைந்து மக்கள் கண்காணிப்பில் போராட்டம் நடக்கின்ற
போது தனி நபர் கொலைகள் அவசியமற்ற நிலை உருவாகும் என அறிந்து கொள்கிறேன். மக்கள்
பணத்தில் தங்கியிருந்தால் கொள்ளைகளும், திருட்டும் தேவையற்றதாகிவிடும் என நம்பிக்கை
தருகின்றன அந்த வரலாறுகள். மக்கள் நடத்துகின்ற வெகுஜனப் போராட்டங்களை
ஊக்குவிப்பதும் அந்த வெகுஜனப் போராட்டங்களிற்கு ஆதாரமாக இராணுவத்தை மக்களின்
கண்காணிப்பில் கட்டமைப்பதுமே ஒரு புரட்சிகரக் கட்சியின் கடமை என உணர்கிறேன். எமது
தேசத்தின் விடுதலைக்கான பாதையை மக்கள் பலத்தோடு, உலக முற்போக்கியக்கங்களின்
துணையோடு நாம் வகுத்துக்கொள்ளலாம் என நம்பிக்கை கொள்கிறேன்.
தனி மனிதர்களின் தூய்மைவாதம், அரசியலை விமர்சிப்பதற்கு மாறாக தனிமனித நடவடிக்கைகளை
குறை கூறுதல் போன்ற விடயங்களுக்கு எல்லாம் முன்னைய போராட்ட அனுபவங்கள் விடை
பகிர்ந்தன. துரோகிகளைத் தீர்மானிக்கும் “அரசியல் பொலீஸ்காரர்களாக” நாம் உலா வந்தமை
போன்ற பல விடயங்களை நாம் மீள்பரிசீலனை செய்யவேண்டும் என்ற முடிவிற்கு வருகிறேன்.
என்னிலும் அதிகமாக மனோ மாஸ்டர், நந்தன், போன்றோர் மார்க்சிய இயக்கங்கள் குறித்தும்
சமூகத்தை விஞ்ஞான பூர்வமாக எவ்வாறு அணுகுவது என்பன குறித்து தெரிந்து
வைத்திருந்தாலும் நான் இவற்றையெல்லாம் எனது நீண்ட போராட்ட வரலாற்று
அனுபவத்திலிருந்து பார்க்க முடிந்ததில் நாம் என்ன செய்யவேண்டும் என்பது குறித்த
பார்வை ஏற்படுகிறது.
ஆயுதங்களிலும் அதிகமாக,பணத்தைச் சேகரித்துக் கொள்வதிலும் அதிகமாக, ஆட்பலத்தையும்
இயக்கப்பிரச்சாரத்தையும் மேற்கொள்வதிலும் , இயக்கத்திற்கு ஆதரவாக மக்களைத்
திரட்டிக்கொள்வதிலும் அதிகமாக மக்களமைப்புக்களை உருவாக்க்க வேண்டும் என்ற
ஆர்வம்தான் எனக்கு ஏற்படுகிறது.
இதெல்லாம் குறித்து, மனோ மாஸ்டர், நந்தன், அழகன் போன்றோரோடு அடிக்கடி விவாதம்
நடத்துவோம். சுந்தரம் ஏற்கனவே சுப்பிரமணியம் போன்ற இடது அரசியல் வாதிகளுடன்
தொடர்பிலிருந்ததால் அவரும் நாம் முன்வைக்கும் கருத்துகளை ஏற்றுக்கொள்கிறார். எது
எவ்வறாயினும் சுந்தரத்தின் பிரதான பிரச்சனையாக இருந்தது பிரபாகரன் மட்டும்தான்.
பிரபாகரனை பிரதியிட்டு புதிய சர்வாதிகாரமற்ற தலைமையை உருவாக்கினால் பிரச்சனைகள்
தீர்ந்துவிடும் என்பதுதான் அவரின் பார்வையாக அமைந்தது.
ஆக அமைப்பினுள் இப்போது இரண்டு வகையான போக்குகள் உருவாகின்றன. முதலாவதாக சுந்தரம்
முன்வைத்த பிரபாகரனை நீக்கி இன்னொருவாரால் அவரைப் பிரதியிடுவதனு;டாக மக்கள்
அமைப்புகளை உருவாக்குவதோ அல்லது அதுபோன்ற ஏனைய ஜனநாயகப் பணிகளை முன்னெடுத்தல்
என்பது. இரண்;டாவதாக நாம் ஒரு அரசியலை முன்வைக்கிறோம் அதனை அமைப்பினுள் பிரச்சாரம்
செய்து அதனை ஏற்றுக்கொள்ள வைப்பதென்பது. இரண்டுக்குமே ஒரு பொதுவான இயல்பு இருந்தது
எனபது உண்மை.பிரபாகரனின் சர்வாதிகாரப் போக்கிற்கு எதிரான போராட்டம் என்பதே. ஆனால்
இரண்டுமே அடிப்படையில் வேறுபட்ட நோக்கங்களைக் கொண்டவையாக அமைந்தன.
இன்னொரு எல்லையில் நான் அனுபவ அரசியலையும் தத்துவார்த்தப் பக்கத்தையும்
ஒன்றிணைத்துப் பார்த்தது போல தேசியப்பற்றுள்ள பிரபாகரனும் புரிந்துகொள்வாரானால்
முழு இயக்கத்திலும் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தலாம் என நம்பினேன்.
இதே காலப்பகுதியில் கிட்டு வாழ்ந்த பண்ணையில் ஒரு சிக்கல் ஏற்படுகிறது. கிட்டு
மீன்பிடிச் சமூகத்தைச் சேர்ந்தவராயினும் வல்வெட்டித்துறையில் மீன்பிடியைத்
தொழிலாகக் கொண்ட பரம்பரையைச் சார்ந்தவரல்ல. வல்வெட்டித்துறையில் மீன்பிடிக்கும்
கூலித் தொழிலாளர்களை ஏனைய உயர் சமூகத்தினர் மதிப்பதில்லை. கிட்டுவின் பண்ணையில்
யோன் என்ற மூத்த உறுப்பினரின் சகோதரரும் இணைந்திருந்தார். அவர் மீன்பிடியைத்
தொழிலாகக் கொண்ட குடும்பத்தைச் சார்ந்தவர். கிட்டு அவரை அவமதிப்பது போலவே பலதடவைகள்
நடந்துகொண்டிருக்கிறார். தவிர,இரண்டு தடவைகள் அவரை அடித்துத்
துன்புறுத்தியிருந்தார். அவ்வேளைகளில் அவரை எச்சரித்து இனிமேல் அப்படி நடந்துகொள்ள
மாட்டார் என்ற உறுதிமொழியை வாங்கியிருந்தேன்.
ஆனால் மூன்றாவது தடவையாகவும் கிட்டு அவருக்கு அடித்திருக்கிறார். இதனைக்
கட்டுப்படுத்த முடியாது என்ற நிலை உருவான போது,கிட்டுவை பண்ணையை விட்டு வீட்டில்
போய் இருக்குமாறு அனுப்பிவிடுகிறேன். அவர் வல்வெட்டித்துறைக்குச் சென்றுவிடுகிறார்.
போராட்டத்திற்கான எமது திசைவழி தவறானது என்ற முடிபிற்கு நான் உட்பட பெரும்பாலோனோர்
வந்தடைகிறோம். மக்கள் சார்ந்த போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட வேண்டும் என்ற
கருத்துப் பரவலாக நிலவுகிறது. இந்த அடிப்படையில் மக்கள் அமைப்புக்களை உருவாக்கி
அவர்களைப் போராடாப் பயிற்றுவிக்க வேண்டும் என்பதில் அனைவரும் உடன்பாட்டிற்கு
வருகிறோம். ஆக, எமது திடீர் இராணுவ நடவடிக்கைகளையும், கொலைகளையும் நிறுத்திவிட்டு
வெகுஜன வேலைகளை முன்னெடுத்து மக்களைப் போராட்டத்திற்கும் தற்காப்பு யுத்ததிற்கும்
தயார்படுத்த வேண்டும் என்று பலரும் கருத ஆரம்பித்தனர்.
இப்போது இயக்கத்தில் உருவாகியிருக்கும் புதிய போக்கை பிரபாகரன்,நாகராஜா
ஆகியோருக்குத் தெரியப்படுத்த வேண்டும் என்ற முடிவின் அடிப்படையில் அவர்களுக்குக்
கடிதம் எழுதுவதாகத் தீர்மானிக்கிறேன். அதற்கு முன்பதாக இயக்கத்தில் உருவாகியிருந்த
இரண்டு போக்குகளுக்கு இடையிலான சமரச முயற்சியாக அனைவரிடமும் ஒரு பொதுவான கருத்தை
முன்வைக்கிறேன். பற்குணம்,மைக்கல் கொலை குறித்த பிரச்சனைகளை எல்லாம் இப்போதைக்குப்
பேசாமல்,வெகுஜன வேலைகளையும் தத்துவார்த்தக் கல்வியையும் அதனோடிணைந்த மக்கள்
அமைப்பைக் கட்டமைக்கும் திட்டத்தை முன்வைக்க வேண்டும் என்பதே அது. சுந்தரம்
ஆரம்பத்தில் எதிர்ப்புத்தெரிவித்த போதும் இறுதியில் ஒரு இணக்கத்திற்கு வருகிறார்.
ஆக அந்தக் கடிதத்தில் ஒன்றை மட்டும் தான் குறிப்பிடுகிறேன். நாங்கள் முன்னெடுக்கும்
போராட்ட வழிமுறை தவறானது.அழிவுகளை ஏற்படுத்த வல்லது. இது குறித்து நாங்கள்
அவசரமாகப் பேச வேண்டியுள்ளது.அனைவரையும் உடனடியாக நாட்டுக்குத் திரும்பி வருமாறு
அழைப்புவிடுக்கிறேன். கடித்தின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொண்ட பிரபாகரன்,
நாகராஜா,பேபிசுப்பிரமணியம் உட்பட அனைவரும் உடனடியாகவே நாடுதிரும்புகின்றனர்.
இந்தியாவில் ரவியும் பாலாவும் மட்டுமே தங்கியிருக்கின்றனர்.
இன்னும் வரும்..

No comments:

Post a Comment